பழைய ஓய்வூதிய திட்டம் வருமா? ஜாக்டோ ஜியோ அமைப்புடன் அரசு பேச்சுவார்த்தை. ! நாளை இது குறித்து முதலமைச்சர் அறிவிப்பை வெளியிடுவார் என ஜாக்டோ ஜியோ. !
சென்னை
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கை. இதற்காக அரசு ஊழியர்கள் நீண்ட நெடிய போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.
இந்நிலையில், இன்று ஜாக்டோ-ஜியோ அமைப்புடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. இதில் தங்கள் கோரிக்கை ஏற்பட்டிருப்பதாகவும், நாளை பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் அமைப்பின் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டம் என்றால் என்ன? புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு ஏன் அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்? நாளை முதலமைச்சர் வெளியிடும் அறிவிப்பு, தேர்தலில் திமுகவுக்கு எப்படி பாசிட்டிவாக அமையும் என்பதை பார்ப்போம்.
பழைய ஓய்வூதிய திட்டம்
கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதிக்கு முன்னர் யாரெல்லாம் அரசு வேலையில் சேர்ந்திருந்தார்களோ அவர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் பொருந்தியது. இந்த திட்டத்தின்படி நீங்கள் அரசு ஊழியராக இருக்கிறீர்கள் எனில், ஓய்வு பெறும்போது கடைசியாக வாங்கி சம்பளத்தில் (Basic pay) 50% அதாவது பாதிக்கு பாதி, உங்களுக்கு ஒய்வூதியமாக வழங்கப்படும்.
- கடைசி ஊதியம் ரூ.60,000
- ஓய்வூதியம் மாதம் மாதம் ரூ.30,000
அகவிலைப்படி உயர்வு
இதில் இன்னொரு பிளஸ் பாயிண்ட் இருக்கிறது. அதாவது விலைவாசி ஏறிக்கொண்டே இருக்கும் என்பதால், அகவிலைப்படி கொடுக்கப்படுகிறது. அதாவது விலைவாசி உயர்வை சமாளிக்க ஆண்டுக்கு இருமுறை, (ஜனவரி மற்றும் ஜூன்) ஊழியரின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படும். நீங்கள் அரசு ஊழியர் எனில், உங்களுடைய அடிப்படை ஊதியம் ரூ.30,000 என்றால், அரசு அகவிலைப்படியை 50% உயர்த்துகிறது எனில், அடுத்த மாதம் முதல் நீங்கள் கூடுதலாக ரூ.15,000 வாங்கலாம்.
இந்த பார்முலா ஒய்வூதியத்திற்கும் பொருந்தும். எனவே ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியம் உயர்ந்து கொண்டே வரும். ஓய்வூதியத்திற்கு நீங்கள் எந்த பங்களிப்பையும் செலுத்த தேவையில்லை.
புதிய ஓய்வூதியம் என்றால் என்ன?
2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் பணிக்கு சேர்ந்தவர்கள் புதிய ஓய்வூதிய திட்டம் அல்லது பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வருவார்கள். புதிய ஓய்வூதியம் என்றாலும், பங்களிப்பு ஓய்வூதியம் என்றாலும் ஒன்றுதான்.
இந்த திட்டத்தின்படி, அரசு ஊழியர் ஓய்வூதியம் பெற வேண்டும் எனில், அவர் தனது அடிப்படை சம்பளத்திலிருந்து 10%-ஐ அரசுக்கு கொடுக்க வேண்டும். இதுதான் முக்கியமான சிக்கல். அரசும் 10% நிதியை கொடுக்கும். இப்படியோ பணி ஓய்வு வரைக்கும் ஊழியரின் ஓய்வூதியம் சேமிக்கப்பட்டு அதை பங்கு சந்தையில் முதலீடு செய்யும். வரும் லாபத்தில் அதில் 60%-ஐ பணி ஓய்வுக்கு பின்னர் மொத்தமாக கொடுத்துவிடும். மீதி உள்ள 40% தொகையை நீங்கள் கட்டாயமாக LIC போன்ற காப்பீட்டில் முதலீடு செய்ய வேண்டும்.
திட்டத்திற்கு எதிர்ப்பு
இந்த முதலீட்டுக்கு வட்டி இருக்கிறது. இந்த வட்டிதான் மாதம், மாதம் உங்களூக்கு ஓய்வூதியமாக வரும். பிரச்சனை என்னவெனில், பழைய ஓய்வூதிய திட்டத்தில் அடிப்படை சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்பட்ட தொகையை விட, LIC போன்ற காப்பீட்டு நிறுவனங்கள் கொடுக்கும் வட்டி மிக குறைவு. இது தவிர அகவிலைப்படி உயர்வு என்கிற அம்சம் இருக்காது. எனவே காப்பீட்டு நிறுவனங்கள் கொடுக்கும் தொகையைதான் காலம் முழுக்க வாங்க வேண்டும். எனவேதான் இந்த திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
தேர்தலுக்கு ஸ்கோர் செய்த திமுக
பழைய ஓய்வூதிய திட்டம் என்பது 20 ஆண்டுகால கோரிக்கை. இந்த கோரிக்கைக்காக அரசு ஊழியர்கள் ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். இன்று இந்த கோரிக்கை தொடர்பாக அரசு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாகவும், நாளை முதல்வர் நல்ல செய்தியை அறிவிப்பார் என்றும் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் கூறியிருக்கிறார்கள்.
செவி சாய்த்த அரச
திமுக பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வரும் பட்சத்தில் நிச்சயம், அது எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் நல்ல பலனை கொடுக்கும். அரசு ஊழியர்களின் வாக்கு வங்கியை சிந்தாமல் சிதறாமல் திமுக அறுவடை செய்துவிடும். முன்னதாக செவிலியர்கள் போராட்டத்திற்கும் அரசு செவி சாய்ந்திருந்தது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று ஒப்புதல் அளித்திருக்கிறது.
ஆக அரசு ஊழியர்களின் கோரிக்கைகள், போராடும் இதர தரப்பினர்களின் கோரிக்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதை காட்டிதான் திமுக பிரச்சாரத்தையே வடிவமைக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
