உங்கள் குடியுரிமையையே.. ஒரு BLO அதிகாரி நீக்க முடியும்! SIR வழக்கில்.. பாயிண்டை பிடித்த கபில் சிபல்.!
உச்சநீதிமன்றம்
சென்னை: இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) தொடர்பான பல மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது.
SIR நடைமுறைக்கு சவால் விடும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை நீதிமன்றம் தொடர்ந்தது. அக்டோபர் 28 அன்று அறிவிக்கப்பட்ட இந்தச் சிறப்புத் திருத்தத்தின் இரண்டாம் கட்டத்தில் தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அடங்கும்.
இந்த SIR நடைமுறைக்கு எதிராக திமுக வழக்கு தொடுத்துள்ளது. கடந்த விசாரணையில் வாக்காளர் பட்டியலை தீவிர சரிபார்க்கும் சிறப்புத் திட்டத்திற்கு (SIR) எதிரான மனுக்கள் குறித்து உச்ச நீதிமன்றம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு (EC) நோட்டீஸ் அனுப்பியது. இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கமளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது
நாடு முழுக்க நடக்கும் SIR
இந்தத் திருத்தப் பணி நாடு முழுவதும் சுமார் 51 கோடி வாக்காளர்களைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் இந்தச் சிறப்புத் திருத்தம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் உயர் நீதிமன்றங்கள் நிறுத்தி வைக்கவும், அதை உச்ச நீதிமன்ற அமர்வு விசாரிக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இன்று இந்த வழக்கில் கேரளா மற்றும் மேற்கு வங்காளம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், SIR நடைமுறையை கடுமையாக விமர்சித்தார். ஒரு பூத் லெவல் அதிகாரி (BLO) ஒருவரின் குடியுரிமையை முடிவு செய்ய முடியாது என்றும், முறையான விசாரணைக்குப் பிறகு இந்த அதிகாரம் மத்திய அரசிடம் மட்டுமே உள்ளது என்றும் அவர் வாதிட்டார்.
SIR வழக்கு கபில் சிபல் வாதம்
தேர்தல் ஆணையம் நிர்ணயித்த காலக்கெடு யதார்த்தமற்றது என்றும் சிபல் சுட்டிக்காட்டினார். கடந்த 22 நாட்களில் 50% படிவங்கள் மட்டுமே டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் எட்டு நாட்களே எஞ்சியுள்ள நிலையில், டிஜிட்டல் மயமாக்கப்படாத வாக்காளர்களின் நிலை என்னவாகும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தற்போது BLO-க்கள் ஒரு நாளைக்கு 50 படிவங்களை விநியோகித்து வருவதாகவும், டிசம்பர் 4-க்குப் பிறகு இது 10 ஆகக் குறைக்கப்படும் என்றும் சிபல் கூறினார். இந்த கட்டுப்பாட்டின் பின்னணியில் உள்ள நியாயத்தை அவர் கேள்வி எழுப்பினார். இந்த செயல்முறை ஏழை, எழுத்தறிவில்லாத மற்றும் விளிம்புநிலை வாக்காளர்களை, குறிப்பாக பெண்கள் மற்றும் தினக்கூலித் தொழிலாளர்களைப் பாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜனநாயகம் என்பது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும், வாக்காளர்களைப் படிவங்களை பூர்த்தி செய்ய வற்புறுத்துவது வாக்காளர் பட்டியலில் இருந்து பெரிய அளவில் மக்களை வெளியேற்றுவதற்கு வழிவகுக்கும் என்றும் சிபல் வலியுறுத்தினார்.
SIR வழக்கு -நீதிபதி சூர்யா காந்த் வாதம்
SIR கட்டமைப்பிற்குள் மேல்முறையீட்டு முறை உள்ளது என்று தலைமை நீதிபதி சூர்யா காந்த் குறிப்பிட்டபோது, மில்லியன் கணக்கானவர்களுக்கு இந்த செயல்முறையை அணுகுவதற்கான வளங்கள் அல்லது விழிப்புணர்வு இல்லை என்று சிபல் மறுப்பு தெரிவித்தார். தேர்தல் ஆணையம் ஒரு அஞ்சல் அலுவலகம் அல்ல என்றும், அனைத்து வாக்காளர் படிவங்களையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வதில்லை என்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்னி கூறினார்.
வாக்காளர் பட்டியல் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் இருந்தால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், பிரிவு 23 இன் கீழ் ஆவணங்களைச் சரிபார்த்து கணக்கெடுப்புகளை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு அரசியலமைப்பு அதிகாரம் உள்ளது என்றும் பக்னி தெரிவித்தார். BLO-க்கள் வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்த வேண்டும் என்றும், வரைவுப் பட்டியல்களை அணுகும்படி வைத்திருப்பது இதன் ஒரு பகுதி என்றும் அவர் மேலும் கூறினார்.
மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி வாதம்
எனினும், தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இருந்தாலும், தற்போது பின்பற்றப்படும் நடைமுறை நியாயமற்றது மற்றும் exclusionary ஆனது என்று சிபல் தொடர்ந்து வலியுறுத்தினார். தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, இந்த செயல்முறை சரியானது என்று வாதம் வைத்தார்.
உள்ளாட்சித் தேர்தல்களுடன் SIR செயல்முறையை நடத்துவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 90% க்கும் அதிகமான படிவங்கள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுவிட்டதாகவும் திவேதி நீதிமன்றத்தில் தெரிவித்தார். SIR-ஐ எதிர்த்து வரும் அரசியல் கட்சிகள் களத்தில் தடைகளை ஏற்படுத்தி, படிவ விநியோகத்தைத் தடுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
சில மனுதாரர்கள் சார்பாக ஆஜரான பிரசாந்த் பூஷன் எழுப்பிய, வேலைப்பளு காரணமாக BLO-க்கள் தவறான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள், நிறைய ஆவணங்களில் தஹ்வாரு செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை திவேதி மறுத்தார். அத்தகைய குற்றச்சாட்டு எதுவும் அதிகாரப்பூர்வ பதிவில் இல்லை என்றும் அவர் கூறினார். கேரளாவில் SIR செயல்முறையை ஒத்திவைக்கக் கோரும் மனுக்களுக்கு விரிவான பதில்களை தாக்கல் செய்யுமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், கேரள தேர்தல் ஆணையத்திற்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேற்கு வங்க மாநில தேர்தல் ஆணையம் மற்றும் மாநில அரசுக்கும் பதில்களை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு டிசம்பர் 9 ஆம் தேதி அன்று மீண்டும் விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.
