மாந்திரீகம் செய்வதாக கூறி அழைத்து சென்று மருமகளின் கழுத்தை அறுத்த மாமியார். !
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி அருகே கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. தன் மகனை இரண்டாவது திருமணம் செய்த காரணத்திற்காக மருமகளை மாமியார் தலையை துண்டித்து கொடூரமாக கொன்றுவிட்டு தலையை ஒரு இடத்திலும், உடலை ஒரு இடத்திலும் புதைத்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல் இருந்துள்ளார்.
மாந்திரீகம் செய்வதாக அழைத்து சென்று மருமளை கொடூரமாக கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வளையாம்பட்டு கிராமத்தில் வசித்து வந்த கூலித் தொழிலாளி ராஜா. இவருக்கும், பெங்களூரை சேர்ந்த 29 வயது பெண் நந்தினி என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ராஜா தற்கொலை செய்துகொண்டார்.
மாமியார் - மருமகள் சண்டை
இதனால் நந்தினி தனது மகன், மகளுடன் அதே பகுதியில் தனியாக வசித்து வந்தார். அப்போது விரியூரை சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் மரிய ரொசாரியோ (36) என்பவருடன் நந்தினிக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. இதையடுத்து 2-வதாக நந்தினி மரிய ரொசாரியோவை திருமணம் செய்துகொண்டார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களது திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கிறான். திருமணம் ஆனதில் இருந்தே நந்தினிக்கும் அவரது மாமியார் கிறிஸ்தோப்மேரிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 2வது தாரமாக வந்த நந்தினியை அவருக்கு பிடிக்கவில்லை. தினந்தோறும் பிரச்சினை ஏற்பட்டு வந்ததால் கணவன் மனைவி இருவரும் அருகில் உள்ள ஊரில் வாடகை வீட்டில் குடியேறினர்.
நீ வந்தால் போதும் என அழைத்து சென்று
மாமியாருடன் நந்தினி பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென கடந்த 29 ஆம் தேதி மாமியார் நந்தினியை தன் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். நம் இருவருக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. இதனை தடுக்க ஒரு மாந்திரீகம் செய்ய இருக்கிறேன். நீ வந்தால் போதும் என்று கூறியிருக்கிறார்.
இதனை உண்மை என நம்பிய நந்தினி மாமியார் கிறிஸ்தோப்மேரி வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அதற்கு பிறகு நந்தினியை காணவில்லை. மரிய ரொசாரியோ தன் தாயிடம் மனைவியை எங்கே என கேட்டுள்ளார். ஆனால் அவர் சரியான விளக்கம் கூறவில்லை. ஏதோ சொல்லி சமாளித்து உள்ளார். இதனால் சந்தேகமடைந்த அவர் போலீசில் புகார் அளித்தார்.
கழுத்தில் வெட்டினேன்
இதன் பேரில் போலீசார் கிறிஸ்தோப்மேரியிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் தான் மருமகள் நந்தினியை கொலை செய்தது தெரியவந்தது. தன் மகனுக்கு இரண்டாம் தாரமாக நந்தினி வந்தது பிடிக்கவில்லை என்றும் இதனால் மாந்திரீகம் செய்ய இருப்பதாக அழைத்து அவரை தலையை துண்டித்து கொலை செய்ததாக அதிர்ச்சி தகவலை கூறினார்.
இதைக்கேட்டு போலீசார் ஒரு நிமிடம் அதிர்ந்து போயினர். என்ன நடந்தது என விவரமாக கூறுகையில், மாந்திரீகம் செய்ய அழைத்து சென்ற போது ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சென்று கொண்டிருந்தபோது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மருமகளின் கழுத்தில் வெட்டினேன். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார்.
மாமியார் கைது
பின்னர் அவரது தலையை தனியாக அறுத்து எடுத்தேன். தலையை ஒரு இடத்திலும், உடலை ஒரு இடத்திலும் என தனித் தனியாக புதைத்து விட்டேன். இதற்கு என் தோழி ஒருவரும் உடந்தையாக இருந்தார்" என்று கூறினார். இதையடுத்து போலீசார் நந்தினியின் உடல் மற்றும் தலையை புதைத்ததாக கூறப்பட்ட இடத்தில் உடலை தோண்டி எடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் மருமகளை கொடூரமாக கொலை செய்த மாமியாரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
