ஆம்பூர் கலவர வழக்கில் தீர்ப்பு , 2 மாவட்ட கண்காணிப்பாளர்கள் தலைமையில் சுமார் 1000 போலீசார் குவிப்பு. !
வேலூர், திருப்பத்தூர்

ஆம்பூர் கலவர வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் 2 எஸ்.பி.க்கள் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, தீர்ப்பு நாளை மறுநாள் வழங்கப்படும் என்று திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த ஷமீல் அஹமது என்ற இளைஞரை, பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அணைக்கட்டு பகுதியை சேர்ந்த பழனி என்பவரின் மனைவி பவித்ரா காணாமல் போனது தொடர்பாக விசாரிப்பதற்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
விசாரணையின் போது, அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் ஷமீல் அகமது அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அந்த இளைஞர் காவலில் இருந்தபோது காவல்துறையினர் தாக்கியதாலேயே உயிரிழந்ததாக ஷமீல் அகமதுவின் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
இதில், ஷமீல் அகமது உறவினர்கள், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என 3,000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி பேருந்துகள், காவல்துறை வாகனங்கள், மதுபான கடை, தனியார் மருத்துவமனை உள்ளிட்டவை சேதப்படுத்தியதாக 191 பேர் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது
இதன் வழக்கு திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்குவதாக வெளியான தகவலை தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் ஆகியோர் தலைமையில் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் 1,000 -க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நாளை மறுநாள் தீர்ப்பு வழங்கப்படும் என்று திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.