கள்ளக் காதலனுடன் மனைவி, கத்தரிக்கோலால் குத்திய கணவன். !
திருப்பூர்
ஒடிசா மாநிலம் ரயகடா பகுதியை சேர்ந்த 32 வயதாகும் விக்ரகாந்த் குமார் என்பவர் திருப்பூர் முத்தணம்பாளையத்தில் தங்கியிருந்து அங்குள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வருகிறார். அவருடைய முதல் மனைவி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்து போய்விட்டார். இதனால் விக்ரகாந்த் குமார், 2-வதாக திருமணம் செய்து கொண்டு மனைவி மற்றும் குழந்தையுடன் முத்தணம்பாளையத்தில் குடியிருந்து வருகிறார்.
இதற்கிடையே முதல் மனைவி ஒடிசா போகாமல், ராக்கியாபாளையம் பிரிவு மணியகாரம்பாளையம் பகுதியில் வசிப்பது விக்ரகாந்த் குமாருக்கு அண்மைல் தெரியவந்தது. இதையடுத்து விக்ரகாந்த் குமார், அவ்வப்போது முதல் மனைவி குடியிருக்கும் வீட்டிற்கு சென்று அவரையும் கவனித்து வந்துள்ளாராம். அவருக்கு, தேவையான பணத்தை செலவுக்கு கொடுத்து கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பனியன் நிறுவனத்தில் இருந்து விக்ரகாந்த் குமார் நேராக முதல் மனைவியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு முதல் மனைவி, தனது முன்னாள் காதலரான ஒடிசாவை சேர்ந்த திலீப் குமார் (28) என்பவருடன் வீட்டில் தனிமையில் இருந்ததை கண்டு ஆடிப்போனார். அப்போது விக்ரகாந்த் குமார், தனது முதல் மனைவியிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர் சரியாக பதில் கூறவில்லை என கூறப்படுகிறது இதனால் முதல் மனைவி மீது விக்ரகாந்த் குமாருக்கு கோபம் ஏற்பட்டது. மேலும் திலீப் குமார் மீதும் அவர் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இதற்கிடையே விக்ரகாந்த் குமாருக்கும், திலீப் குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டார்களாம். இதில் ஆத்திரம் அடைந்த விக்ரகாந்த் குமார், வீட்டில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து திலீப்குமாரின் நெஞ்சில் பலமாக குத்திவிட்டாராம். இதனால் அவர் சரிந்து கீழே விழுந்தார். அதன்பிறகு விக்ரகாந்த் குமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
கத்தரிக்கோலால் குத்தியதில் போராடிய திலீப்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திலீப் குமார் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நல்லூர் போலீசார், திலீப் குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த விக்ரகாந்த் குமாரை கைது செய்தனர். இந்த சம்பவம், திருப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
