எனக்கு சொத்து எதுவும் வேண்டாம்! மக்களுக்கே தர போகிறேன்! மகனை இழந்த வேதாந்தா அனில் அகர்வால் அறிவிப்பு.!

மும்பை

எனக்கு சொத்து எதுவும் வேண்டாம்! மக்களுக்கே தர போகிறேன்! மகனை இழந்த வேதாந்தா அனில் அகர்வால் அறிவிப்பு.!

மும்பை: நாட்டின் முக்கிய தொழில் குழுமங்களில் ஒன்றான வேதாந்தா நிறுவனத்தின் தலைவரான அனில் அகர்வால் மகன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

தனது மகனின் மரணம் தொடர்பாக உருக்கமான போஸ்ட்டை பகிர்ந்துள்ள அனில் அகர்வால், இனி தான் சம்பாதிப்பதில் 75%ஐ சமூக சேவைகளில் செலவிடப்போவதாக அனில் அகர்வால் அறிவித்துள்ளார்.

இந்தியாவின் மிக முக்கியமான தொழில் குழுமங்களில் ஒன்று வேதாந்தா.. இந்தக் குழுமத்தின் தலைவராக அனில் அகர்வால் இருக்கிறார். இந்த நிறுவனம் காப்பர், அலுமினியம், ஜின்க், இரும்பு போன்ற கனிமங்களை உற்பத்தி செய்வதில் முக்கியமான கம்பெனியாக இருக்கிறது. தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் கூட இந்த நிறுவனத்திற்குச் சொந்தமானது தான்.

அக்னிவேஷ் மரணம்

இந்த வேதாந்தா குழுமத்தின் தலைவரான அனில் அகர்வாலின் மகன் அக்னிவேஷ் அகர்வால் (49) திடீரெனக் காலமானார். அமெரிக்காவில் பனிச்சறுக்கு செய்து கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் சிக்கிய அக்னிவேஷ் அகர்வால் மவுண்ட் சினாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையின்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தார். மருத்துவர்களும் திடீர் மாரடைப்பே மரணத்திற்கான காரணம் என்பதை உறுதி செய்துள்ளனர்.

வேதாந்தா நிறுவனர்

தனது மகனின் இழப்பை வாழ்வின் இருண்ட நாள் என அனில் அகர்வால் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் மேலும், "எனது அன்பு மகன் அக்னிவேஷ் மிகச் சீக்கிரம் எங்களை விட்டுச் சென்றுவிட்டான். அவனுக்கு 49 வயது தான் ஆகிறது. அவன் ஆரோக்கியம், உற்சாகம், கனவுகள் நிறைந்தவனாக இருந்தான். பனிச்சறுக்கு விபத்துக்குப் பின் கூட சீராகவே அவனது உடல்நிலை முன்னேறி வந்தது. ஆனால் விதி வேறு மாதிரி விளையாடிவிட்டது.. அவன் தனது தாயின் ஒளி, ஒரு நல்ல சகோதரன், நம்பிக்கைக்குரிய நண்பன், சந்திக்கும் அனைவரையும் கவர்ந்த மென்மையான ஆன்மா.

75% வருமானம் தானம்

அவன் எளிமையாகவும், அன்பும், மனித நேயமும் மிக்கவனாக இருந்தான்.. அவன் என் மகன் மட்டுமல்ல. என் நண்பன். என் பெருமை. என் உலகம். சம்பாதிப்பதில் 75% மேல் சமூகத்திற்குத் தருவதாக நான் அக்னியிடம் உறுதியளித்திருந்தேன். அந்த வாக்குறுதியை இன்று மீண்டும் சொல்கிறேன்.

இனி நான் எளிமையான வாழ்க்கையை முடிவு செய்துவிட்டேன். சம்பாதிப்பதில் 75%ஐ நிச்சயம் சமூக சேவைக்குச் செலவிடுவேன்" என்று பதிவிட்டுள்ளார்.