கடலூர் மாவட்டம் பிச்சாவரம் படகு இல்லத்தில் தமிழ்நாட்டின் முதல் சூரியஆற்றல் மின்படகு சேவை.!

கடலூர்

கடலூர் மாவட்டம் பிச்சாவரம் படகு இல்லத்தில் தமிழ்நாட்டின் முதல் சூரியஆற்றல் மின்படகு சேவை.!

கடலூர் மாவட்டம் பிச்சாவரம் படகு இல்லத்தில் தமிழ்நாட்டின் முதல் சூரியஆற்றல் மின்படகு சேவையினை மாவட்ட ஆட்சித்தலைவர்  தொடங்கிவைத்தார்

தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் முன்னெடுப்பாக மாநிலத்தின் முதல் காலநிலை மீள்திறன்மிகு கிராமம் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிள்ளை பேரூராட்சியில் தமிழ்நாட்டின் முதல் சூரிய ஆற்றல் மின்படகு சேவையினை பிச்சாவரம் படகு இல்லத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்  தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, காலநிலை மீள்திறன்மிகு கிராமத் திட்டத்தின் வாயிலாக கிள்ளை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தசிபி ஆதித்யா செந்தில்குமார்  தலைமையில்  துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவிக்கையில், 

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளாக பல்வேறு மாவட்டங்களில் 11 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் வட்டத்திற்குட்பட்ட கிள்ளை பேரூராட்சி இடம்பெற்றுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கிள்ளை பகுதியினை பசுமை வளாகமாக மேம்படுத்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் வனத்துறை, மீன்வளத்துறை, நீர்வளத்துறை ஆகிய துறைகளின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில்,பிச்சாவரம் படகு இல்லத்தில் எரிபொருள் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து, காற்று மற்றும் நீர் மாசுபாட்டை குறைத்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை சுற்றுலாவாக ஏற்படுத்திடும் வகையிலும், காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை எதிர்கொள்ளும் கிராமங்களின் மீள்திறன்மிகு வளர்ச்சியை வலுப்படுத்திடவும் ரூ.24 இலட்சம் மதிப்பீட்டில் 100% சூரிய ஆற்றலால் இயக்கப்படும் மின்படகு சேவையினை சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

காலநிலை மீள்திறன் கிராம அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளதையும், கிள்ளை பகுதியில் பக்கிங்காம் கால்வாய் தூர்வாரி புனரமைக்கப்பட்டுள்ளதையும்,  சதுப்புநில காடுகளை மேம்படுத்தும் விதமாக அலையாத்தி செடிகள் நடவு செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டு வருவதையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

கிள்ளை பகுதியில் உள்ள பழங்குடியின மக்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்திடும் வகையில் அலையாத்தி காடுகளில் தேன் உற்பத்தியினை மேற்கொள்ளும் பொருட்டு தேன் உற்பத்திக் கூடுகள் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதை ஆய்வு செய்யப்பட்டது. காலநிலை மீள்திறன்மிகு கிராமம் திட்டத்தின் கீழ், இருளர் பழங்குடியினர் கிராம மக்களுக்கு வாழ்வாதார வாய்ப்பாக மொத்தம் 50 தேனீ பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.மேலும் உற்பத்தி செய்யப்படும் தேனை சுற்றுலா பயணிகளிடம் விற்பனை மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 
சுற்றுச்சூழல், பொருளாதாரம், சமூக பங்கேற்பு ஆகிய மூன்றையும் ஒருங்கிணைந்து காலநிலை மீள்திறன்மிகு கிராமமாக கிள்ளை பகுதியை மாற்றுவதற்கான அனைத்து பணிகளையும் துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கே மேற்கொண்டு முன்மாதிரி கிராமமாக உருவாக்கிட துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார்  தெரிவித்தார்.

ஆய்வின் போது உதவி வன பாதுகாவலர் இக்பால், மாவட்ட சுற்றுலா அலுவலர் கண்ணன், உதவி இயக்குநர் மீனவளத்துறை நித்தியபிரியதர்ஷினி,உதவி வனப் பாதுகாவலர் இக்பால், மாவட்ட பசுமைத் தோழர் மணிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.