இதுவரை 130 பவுன் நகை திருட்டு, சாவி இல்லாமலேயே திருட்டில் ஈடுபட்ட நபர். ! கோவை போலீசார் அளித்த திடுக்கிடும் தகவல்கள். !
கோவை
கோவையில் சமீபகாலமாக திருட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஆன்லைன் திருட்டு, ஆஃப்லைன் திருட்டு என விதவிதமாக திருட்டுச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில்
கோவை மாவட்டம், குனியமுத்தூர் நரசிம்மபுரம் ஐயப்ப நகர் பகுதியைச் சேர்ந்தர் ஜெபா மார்டின். இவர் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி அவரது உறவினர் இல்லத்திற்கு துக்க நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளார். பின்னர், 26 ஆம் தேதி வீட்டிற்கு திரும்பிய நிலையில், வீட்டின் பூட்டு உடைக்கப்படாமலேயே திறக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 103 பவுன் தங்க நகைகள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.
80 பவுன் நகை பறிமுதல்
இச்சம்பவம் குறித்து குனியமுத்தூர் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் தடயவியல் நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். விசாரணையில், கண்ணப்ப நகர் பகுதியில் வசித்து வரும் கிருஷ்ணமூர்த்தி (48) என்பவர் இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸார் கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில் இருந்த 80 பவுன் நகைகள், சாவிகள், திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த திருட்டு சம்பவம் குறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் கோவை மாநகர துணை காவல் ஆணையாளர் கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜெபா மார்டின் கடந்த 24 ஆம் தேதி அவரது உறவினர் இல்லத்திற்கு துக்க நிகழ்ச்சிக்காகச் சென்றுள்ளார். பின்னர், 26 ஆம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது நகைகள் திருடிச் செல்லப்பட்டுள்ளதாகத் தகவல் அளித்தார்.
போலீஸ் விசாரணை
தொடர்ந்து விசாரணை மேற்கொண்தில் வீட்டின் கதவை உடைத்து திறக்கப்படாமல், சாவியைப் போட்டு திறந்தது போல இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சந்தேகத்தின்பேரில் வீட்டில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அவர்கள் இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடவில்லை என்பது தெரியவந்தது.
2024 ஆம் ஆண்டு குனியமுத்தூரில் இதேபோல 2 வழக்குகள் பதிவாகி, கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது தெரியவந்தது. எனவே, அப்பொழுது உள்ள சிசிடிவி காட்சிகளையும், தற்பொழுது கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளையும் வைத்து இவரை பிடித்து விசாரணை மேற்கொண்டோம். விசாரணையில் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, அவரது வீட்டில் இருந்து நகைகள் மீட்கப்பட்டது தெரியவந்தது.
கொத்து சாவியை வைத்து திருட்டு
திருட்டில் ஈடுபட்ட கிருஷ்ணமூர்த்தி ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தற்போது கோவையில் கண்ணப்ப நகர் பகுதியில் வசித்து வருகிறார். ஆக்டிங் டிரைவராக பணிபுரிந்து கொண்டே, இடையில் இதுபோன்ற திருட்டுச் சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். 1993 ஆம் ஆண்டு மும்பைக்குச் சென்று கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்.
2003 ஆம் ஆண்டும் கோவையில் இவர் மீது திருட்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 2023 இல் சரவணம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியிலும் இதேபோல கள்ளச்சாவி போட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு சிறைச் சென்று வந்தவர். இவர் கையில் பல்வேறு சாவிகளை வைத்து கொத்தாக வைத்துக் கொண்டு இரவு நேரங்களில் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு, சாவிகளை அதற்கேற்ப தயார் செய்து திருடி வந்துள்ளார்.
தற்போது அவர் திருடிய நகைகளில் சில நகைகளை அடமானத்திற்கு வைத்துள்ளார். சில நகைகளை வேறு இடத்தில் கொடுத்ததாகக் கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
