ஜனநாயகன் திரைப்படத்தை 10 ஆம் தேதி ரிலீஸ் பன்னக் கூடாதா - உயர்நீதிமன்றம்

ஜனநாயகன்

ஜனநாயகன் திரைப்படத்தை 10 ஆம் தேதி ரிலீஸ் பன்னக் கூடாதா - உயர்நீதிமன்றம்

நடிகரும், தவெக தலைவருமான விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி டியோல், பிரியாமணி, நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். விஜய் அரசியலுக்கு வந்துவிட்டதால், இது அவரின் கடைசி படமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள் ஜனநாயகன் திரைப்படத்தை காண காத்திருக்கின்றனர். இந்தப் படத்தின் ரிலீஸ்க்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இதுவரை தணிக்கை சான்று அளிக்கப்படவில்லை. தணிக்கை சான்றுக்கு தாமதமாகி வருவதால், தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி இருக்கிறது.

இந்த வழக்கு நீதிபதி பிடி ஆஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பு நிறுவனம் தரப்பில், கடந்த 19ஆம் தேதி படம் பார்த்த தணிக்கை குழு சில காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை மியூட் செய்யவும் அறிவுறுத்தியது. பின்னர் தணிக்கை குழு பரிந்துரைத்த மாற்றங்களை செய்து அனுப்பிய போதும், இதுவரை சான்றிதழ் அளிக்கப்படவில்லை.

ஜனநாயகன் படத்திற்கு யு/ஏ சான்றுக்கு பரிந்துரைத்த நிலையில், தணிக்கை சான்று குறித்து முடிவு எடுக்க மறு ஆய்வுக்காக தணிக்கை வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் படத்தில் மத உணர்வை புண்படுத்தும் காட்சிகள் உள்ளதாக தெரிவித்து சான்றிதழ் வழங்கப்படாமல் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர், ஜனநாயகன் ரிலீஸ் தேதியை நிர்ணயித்தாலும் நாங்கள் சட்டப்படிதான் செல்ல முடியும் என்று வாதிட்டார். இதனை கேட்டுக் கொண்ட நீதிபதி, ஜனநாயகன் படத்தின் ரிலீஸை ஏன் ஜனவரி 10ஆம் தேதிக்கு தள்ளி வைக்கக் கூடாது. தை பிறந்தால் வழி பிறக்குமே? என்று கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் மத உணர்வை புண்படுத்தும் காட்சிகள் தொடர்பான புகாரை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் ஜனநாயகன் படம் திட்டமிட்டபடி ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.