வெனிசுலா விசயத்தில் இந்தியாவை மிரட்டும் அமெரிக்கா அதிபர் டிரம்ப். !
இந்தியா Vs அமெரிக்கா
நியூயார்க்: வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டு அதிபர் நிக்கோலர் மதுரோவை கைது செய்த சூட்டோடு இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில்.. உடனடியாக இந்தியா இறங்கி வர மறுத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய இறக்குமதிகள் மீதான நாட்டின் தற்போதைய வரிகளை அதிகரிக்கக்கூடும் சூழல் ஏற்படலாம். இந்தியா உடனே எண்ணெய் வர்த்தகத்தில் பின்வாங்க வேண்டும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தால் இரு நாடுகளுக்கும் இடையே புதிய ராஜதந்திர சிக்கல்கள் ஏற்படலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா ரஷ்யாவுடனான உறவு
டிரம்பின் நிர்வாகம், இந்தியா ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு நீண்டகாலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆகஸ்ட் 2025-இல், இந்தியா மீதான வரிகளை 50% ஆக உயர்த்த இது ஒரு காரணமாக மேற்கோள் காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வர்த்தக உறவுகள் குறித்து அமெரிக்கா தனது கவலைகளை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது.
தனது உரையில் பிரதமர் நரேந்திர மோடியை பற்றியும் டிரம்ப் குறிப்பிட்டுப் பேசினார். மோடி ஒரு "நல்ல மனிதர்" என்றும், அமெரிக்க ஜனாதிபதி மகிழ்ச்சியாக இல்லை என்பது அவருக்குத் தெரியும் என்றும் கூறினார். வெள்ளை மாளிகை வெளியிட்ட ஆடியோ பதிவில் பேசிய டிரம்ப், "நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது அவருக்கு (மோடிக்கு) தெரியும். என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பது முக்கியம். அவர்கள் வர்த்தகம் நடத்துகிறார்கள், அதன் மீது மிக விரைவாக வரிகளை உயர்த்த முடியும்..." என்றார். மேலும், "ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் இந்தியா உதவ மறுத்தால், அதன் மீதான வரிகளை அதிகரிக்கலாம்," என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் டிரம்ப்பின் கூற்றை மேற்கோள் காட்டியுள்ளது.
வெனிசுவேலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவின் கைதுக்குப் பிறகு அமெரிக்காவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த விளக்கமளிக்கும் கூட்டத்தின்போது டிரம்ப் இந்த கருத்துக்களை வெளியிட்டார். தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய தாக்குதல்களிலும் எண்ணெய் ஒரு முக்கிய காரணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வெனிசுலா மீதான அட்டாக்
இந்தியா-அமெரிக்கா இடையேயான தொடர்ச்சியான வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் டிரம்ப்பின் இந்த சமீபத்திய வரி உயர்வு குறித்த எச்சரிக்கை வந்துள்ளது. கடந்த அக்டோபரில், இந்திய இறக்குமதிகள் மீது 50% வரி அமலுக்கு வந்த சில வாரங்களுக்குப் பிறகு, ரஷ்ய எண்ணெய்க் கொள்முதலை இந்தியா நிறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தனக்கு "உறுதியளித்ததாக" டிரம்ப் முன்பு உரிமை கோரியிருந்தார். இருப்பினும், மோடி - டிரம்ப் இடையே அத்தகைய உரையாடல் எதுவும் நடைபெறவில்லை என்று இந்தியா டிரம்ப்பின் கூற்றை மறுத்தது.
