3 கோடி டேர்ம் இன்சூரன்ஸ் பணம்.. தந்தையை பாம்பை விட்டு கடிக்க வைத்த மகன்கள்.! இறுதியில் நடந்ததென்ன?

சென்னை

3 கோடி டேர்ம் இன்சூரன்ஸ் பணம்.. தந்தையை பாம்பை விட்டு கடிக்க வைத்த மகன்கள்.! இறுதியில் நடந்ததென்ன?

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை நல்லதண்ணீர்குளம் தெருவைச் சேர்ந்த 56 வயதாகும் கணேசன் என்பவர் அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக வேலை பார்த்து வந்தார். கணேசன், கடந்த அக்டோபர் மாதம் 22-ந் தேதி காலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, பாம்பு கடித்து இறந்ததாக பொதட்டூர் பேட்டை போலீசில் அவரது மகன் புகார் அளித்தார்.

பாம்பு கடித்தது எப்படி

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஆனால் கணசேனின் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் ஒரு பதிலை கூறியிருக்கிறார்கள். பாம்பு கடித்து இறந்தவர் எப்படி இறந்தார் என்பது குறித்து ஒவ்வொருவரும் முன்னுக்கு பின் முரணாக கூறியதை கண்ட போலீசார் சந்தேகம் அடைந்தனர். இதனிடையே இன்சூரன்ஸ் நிறுவனத்திற்குமே சந்தேகம் வந்தது. இதையடுத்து தீர விசாரித்து உண்மையை கண்டுபிடிக்க வேண்டும் என்று இன்சூரன்ஸ் நிறுவனம், வடக்கு மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க்கிடம் புகார் அளித்தது.

3 கோடிக்கு டேர்ம் இன்சூரன்ஸ்

அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், கணேசன் சுமார் 3 கோடிக்கு டேர்ம் இன்சூரன்ஸ் எடுத்து இருந்தது தெரியவந்தது. அதனை பெறுவதற்காக, கணேசனின் மகன்கள் மோகன்ராஜ், ஹரிஹரன் ஆகியோர் மணவூரை சேர்ந்த பாலாஜி (28), பிரசாந்த் (35), நவீன் குமார் (28), ராணிப்பேட்டை மாவட்டம் மோசூர் கிராமத்தைச் சேர்ந்த தினகரன் (28) ஆகியோருடன் சேர்ந்து தங்களது தந்தையின் கழுத்தில் கட்டுவிரியன் பாம்பை கடிக்க வைத்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

சிக்கியது எப்படி

இதனையடுத்து மோகன்ராஜ், ஹரிகரன் மற்றும் பாலாஜி, பிரசாந்த், நவீன் குமார், தினகரன் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

தந்தையின் காப்பீடு பணம் மற்றும் அரசுவேலைக்கு ஆசைப்பட்டு இப்படி தவறான செயலால் தந்தையை பறிகொடுத்தது மட்டுமின்றி, வாழ்நாள் முழுக்க இனி கம்பி எண்ண போகிறார்கள்.

யாரும் இதுபோன்ற முட்டாள்தனங்களை செய்ய வேண்டாம். அப்படி செய்தால் கண்டிப்பாக காப்பீடு நிறுவனம் கண்டுபிடிக்கும், போலீசும் கண்டிப்பாக விசாரணையில் கண்டுபிடித்துவிடும், கடைசியில் கம்பி தான் எண்ண வேண்டியதிருக்கும் என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது.