திருத்தணி இரயில் நிலையத்தில் பட்டுப்புடவை வியாபாரி தாக்கப்பட்டார். !

திருவள்ளூர்

திருத்தணி இரயில் நிலையத்தில் பட்டுப்புடவை வியாபாரி தாக்கப்பட்டார். !

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ஒடிசாவைச் சேர்ந்த சுராஜ் என்ற இளைஞர் மின்சார ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது பட்டாக்கத்தி வைத்து அந்த இளைஞரை மிரட்டியவாறு நான்கு பேர் ரீல்ஸ் எடுத்தனர்.

அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் ரயிலில் இருந்து இறக்கிய கும்பல் அப்பகுதியில் வைத்து கொடூரமாக தாக்கியது. மேலும் அதனையும் வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்ட நிலையில் கடும் கண்டனம் எழுந்தது.

திருத்தணி தாக்குதல்

இதை எடுத்து அவர்களை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சுராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தான் தனது சொந்த ஊருக்கு செல்வதாக கையெழுத்திட்டதாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

அப்பகுதியில் அதிகரித்து வரும் போதை பொருள் மற்றும் ஆயுத பயன்பாடு காரணமாகவே இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாகவும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அதே நேரத்தில் அந்த இளைஞர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியதற்கான தடயங்கள் இல்லை எனவும், இருந்த போதும் இது தொடர்பாக விசாரித்து வருவதாக காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் சுராஜ் மீதான தாக்குதல் சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மற்றொரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

திருத்தணி ரயில் நிலையத்தில் வியாபாரி ஒருவரை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கொடூரமாக தாக்கி இருக்கின்றனர்.

பட்டுப்புடவை வியாபாரி 

பட்டுப்புடவை வியாபாரம் செய்யும் ஜமால் என்பவர் திருத்தணி ரயில் நிலையத்தில் காத்திருந்தபோது அப்பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் ஜமாலை மிக கடுமையாக தாக்கியுள்ளனர்.

அவரை காப்பாற்ற முயன்ற போது அங்கிருந்த பொது மக்களையும் அவர்கள் மிரட்டியதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து ரயில் நிலையத்திலிருந்து இழுத்துச் சென்று அவரை தாக்கிய நிலையில் தகவல் அறிந்து வந்த போலீசார் ஜமாலை மீட்டுள்ளனர். மேலும் அந்த இளைஞர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருத்தணியில் ஓடும் ரயிலில் வட மாநில இளைஞர் மீது தாக்குதல் நடந்த சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அதே ரயில் நிலையத்தில் மற்றொரு தாக்குதல் சம்பவம் அரங்கேறி இருப்பது பொதுமக்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை இழந்துள்ளது.