மீண்டும் ஐசியு வில் சேர்க்கப்பட்ட அஜிதா, உடல் நிலை மோசமானதால் மீண்டும் ஐசியு வில் அனுமதி. !
தூத்துக்குடி
தூத்துக்குடி: விஜய்யின் காரை வழிமறித்த தவெக தூத்துக்குடி பெண் நிர்வாகி அஜிதா, பதவி கொடுக்காத விரக்தியில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதில் தூத்துக்குடியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நிலை முன்னேற்றம் அடைந்த நிலையில் திடீரென மீண்டும் அஜிதா ஐசியூவில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார்.
திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவரை மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி பெண் நிர்வாகி
தமிழக வெற்றிக் கழகத்தில் 120 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். எனினும் ஒரு சில இடங்களில் மாவட்ட செயலாளர்கள் பதவி நியமிக்கப்படாமல் இருந்தது. இதில் ஒன்று தான் தூத்துக்குடி. இந்த நிலையில் கடந்த வாரம் சென்னை பனையூரில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பதவி வழங்கப்பட்டது.
இதனை அறிந்த தூத்துக்குடியை சேர்ந்த அஜிதா ஆக்னல் சென்னை பனையூர் வந்திருந்தார். தமிழக வெற்றிக் கழக பெண் நிர்வாகியான இவர் தனக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்தார். ஆனால் அவருக்கு அந்த பதவி வழங்கப்படவில்லை. முன்னதாக இது தொடர்பான தகவல் தெரிந்ததும், பனையூர் அலுவலகம் வந்த விஜய்யின் காரை நடுவழியில் மறித்தார்.
தூக்க மாத்திரை சாப்பிட்டார்
இது அன்றைய தினம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தொடர்ந்து கட்சிஅலுவலக வாசல் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவரது ஆதரவாளர்களும் சேர்ந்து விஜய் வந்து பார்க்கும் வரை இங்கிருந்து செல்லமாட்டோம் என தர்ணா போராட்டம் செய்தனர். இதற்கிடையே தூத்துக்குடியை சேர்ந்த சாமுவேல் என்பவருக்கு தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
இதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அஜிதா, உயிருள்ளவரை விஜய்யின் தவெகவில் தான் இருப்பேன் என்றும், விரைவில் விஜய் என்னை அழைப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று கூறி தூத்துக்குடி சென்றார். இந்த நிலையில் கடந்த 25 ஆம் தேதி வீட்டில் இருந்த அவர் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில்
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினவர் அவரை மீட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. விஜய்யின் காரை வழிமறித்தது குறித்து சமூக வலைதளங்களில் அஜிதாவுக்கு எதிராக பல்வேறு அவதூறு கருத்துகள் பரவியதால் மனமுடைந்த நிலையில் இருந்த அவர் இந்த முடிவை எடுத்ததாக குடும்பத்தினர் கூறினர்.
தொடர்ந்து அஜிதா ஆக்னல் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். நேற்று முன் தினம் அவரை ஏராளமானவர்கள் சந்தித்து நலம் விசாரித்து சென்றனர். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அஜிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
