என் முன்னால் கணவர் திருமாறன் சொல்வது பொய், நான் 10 லட்சமெல்லாம் வாங்கவில்லை என நிகிதா பேட்டி. !
சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அஜித்குமார் மரணத்திற்கு நிகிதாதான் காரணம் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், அன்றைய தினம் என்ன நடந்தது என்பது குறித்து நிகிதா விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து புதிய தலைமுறைக்கு நிகிதா அளித்த பிரத்யேகப் பேட்டியில் கூறியிருப்பதாவது:
"என் அம்மாவுக்குக் கட்டி (Tumour) இருப்பதால் அவர் அவ்வப்போது மயங்கி விழுந்துவிடுகிறார். நான் மருத்துவமனைக்கு ஸ்கேன் எடுக்க திருமங்கலத்திலிருந்து சென்றேன். அப்போது காரை நான்தான் ஓட்டினேன்; என் அம்மா பின்புறம் உட்கார்ந்திருந்தார். என் அம்மாவை பிடித்துக்கொள்ள ஒரு ஆள் தேவைப்பட்டார். அவரை ஏற்றி இறக்கவும் நான் மட்டும்தான் இருந்தேன். இதில் நகைகளை எப்படிப் பாதுகாப்பது என்று யோசித்தேன். அதனால், நகைகளைக் கழற்றி காரில் வைத்துவிடுங்கள் என்றேன்.
ஸ்கேன் செய்துவிட்டு வந்து போட்டுக்கொள்ளலாம் என்று சொன்னேன். அவரும் சரி என்று ஒரு தாலி கொடி, இரண்டு வளையல்கள், இரண்டு மோதிரம் ஆகியவற்றை கழற்றி வைத்தார்.
பிறகு செல்லும் வழியில், மடப்புரம் காளியம்மன் கோயில் மிகவும் சக்தி வாய்ந்தது என்று சொன்னார்கள். அதனால் நானும் அம்மாவும் கோயிலுக்குச் செல்ல விரும்பினோம். அப்போது காரைக் கோயில் வாசலில் நிறுத்தினேன்.
அப்போது கோயில் ஊழியரான அஜித்குமார் தம்பிதான் சக்கர நாற்காலி (wheelchair) கொண்டு வந்தார். என் அம்மா முன்பக்கம் சாய்ந்துவிடும் அளவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் நான் அவரைப் பிடித்துக்கொள்ள வேண்டியிருந்தது. இதனால், அஜித்குமாரிடம் சாவியைக் கொடுத்து காரைப் பார்க்கிங் செய்கிறீர்களா என்று கேட்டேன். அவரும் சரி என்று கூறி கார் சாவியை வாங்கினார். அவருக்கு ஓட்டத் தெரியாது என்பதை எங்களிடம் சொல்லவில்லை. பின்னர் நானும் அம்மாவும் உள்ளே சென்றோம். அம்மாவை உட்காரவைத்துவிட்டு நான் அர்ச்சனை தட்டு வாங்கச் சென்றேன்.
அங்கு கூட்டம் அதிகம் இருந்ததால் அரை மணி நேரம் கழித்துதான் என்னால் அர்ச்சனைப் பொருட்களை வாங்க முடிந்தது. பின்னர் உள்ளே சென்றேன். கார் சாவி கொடுத்தாரா என்று அம்மாவிடம் கேட்டேன். அதற்கு அம்மா, 'கொடுத்துவிட்டார், ஆனால் 20 நிமிடங்கள் கழித்துதான் கொடுத்தார்' என்றார்.
நானும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. காரை எடுக்கும்போது வடகரையைச் சேர்ந்த சரவணன் எடுத்துக்கொண்டு வந்தார். நாங்கள் பாதி வழியில் சென்றபோது நகைகளைப் போட்டுக்கொள்ளுங்கள் என்றேன். அதற்கு அம்மா, 'கோயிலுக்குப் போகும்போதே போட்டிருக்கணும்' என்றார். நானும் 'அதனால் என்ன, இப்போது போடுங்கள்' என்று சொன்னேன்.
பிறகு அம்மா தேடிப் பார்த்துவிட்டு நகைகளைக் காணோம் என்று பதறினார். உடனே காரைத் திருப்பிக்கொண்டு அந்தக் கோயிலுக்கே சென்றேன். அங்கு அஜித்திடம் விசாரித்தேன். இதுதான் நடந்தது" என்றார்.
திருமாறன் குற்றச்சாட்டுக்கு நிகிதா மறுப்பு
மேலும், நிகிதாவிடம் திருமாறன் குற்றச்சாட்டு குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், "திருமாறன் விவகாரம் முடிந்துபோனது. அவர் சொல்வதுபோல் நான் ₹10 லட்சத்தை அவரிடம் பெற்றுக்கொண்டு விவாகரத்து கொடுத்ததாகச் சொல்வதெல்லாம் அப்பட்டமான பொய்" என்று மறுத்தார்.
அஜித் குமார் மரண வழக்கில் நிகிதா பெயர் அடிபட்டதுமே அவர் குறித்து திருமாறனும் புகார் கூறினார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எனக்கு 21 ஆண்டுகளுக்கு முன்பே நிகிதா குடும்பத்தை தெரியும். அவர் என்னை திருமணம் செய்துவிட்டு ஒரே நாளில் பாலும், பழமும் சாப்பிடுவதற்கு முன்பே ஓடிவிட்டார். அவர் 3-க்கு மேற்பட்ட திருமணங்கள் செய்து ஏமாற்றியுள்ளார். திருமணம் செய்துவிட்டு ஒரே நாளில் ஓடிப்போய் விடுவார்.
பின்னர் திருமணம் செய்தவர்கள் மீது வரதட்சிணை புகார் கொடுத்து, அந்த குடும்பத்தை சித்ரவதைக்கு ஆளாக்கினார். தொடர்ந்து மிரட்டி பணம் பறிப்பது தான் அவரது வேலை. என்னிடம் அவரது தந்தை ரூ.10 லட்சம் பெற்றுக் கொண்டுதான் விவாகரத்து கொடுத்தனர். திருமண மோசடி மட்டுமின்றி வேலை வாங்கி தருவதாகவும் பல்வேறு மோசடிகளை செய்துள்ளனர்". இவ்வாறு திருமாறன் தெரிவித்துள்ளார்.
திருமாறன் கருத்திற்கு நிகிதாவின் பதில் :
தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் திருமாறன் உடனான என் உறவு எப்போதோ முடிந்துவிட்டது.
அவரிடம் நான் ₹10 லட்சம் வாங்கிக்கொண்டுதான் விவாகரத்து கொடுத்தேன் என்று சொல்வது அப்பட்டமான பொய்" என நிகிதா பேட்டியளித்துள்ளார்.