ஆளுநரிடம் பட்டம் வாங்க மறுத்த பெண்ணின் கல்விப்படிப்பு பட்டத்தை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு. ! வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம். !
நெல்லை
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் போது, ஆளுநர் ஆர் என் ரவியிடம் இருந்து பட்டம் பெற மறுத்த மாணவியின் பட்டத்தை ரத்து செய்யுமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.
முன்னதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி கையில் இருந்து பட்டம் பெற மறுத்த மாணவியின் செயல், ஆளுநரை அவமதிக்கும் வகையில் இருந்ததாக நீதிமன்றம் கூறியிருந்தது.
ஆளுநரிடம் பட்டம் வாங்க மறுத்த மாணவி
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா கடந்த ஆகஸ்டு மாதம் 13 ஆம் தேதி நடந்தது. இந்த விழாவில் ஆளுநர் ஆர் என் ரவி கலந்துகொண்டு பட்டம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வந்தார். அப்போது போது, மாணவி ஜீன் ஜோசப் என்பவர் மட்டும் ஆளுநர் ஆர் என் ரவியிடம் இருந்து பட்டம் பெற மறுத்து துணை வேந்தரிடம் பட்டம் பெற்றுக்கொண்டார்.
மாணவ - மாணவிகள் எல்லாரும் வரிசையாக வந்து, தங்களது பட்டப்படிப்பு சான்றிதழை ஆளுநரிடம் இருந்து வாங்கி சென்ற நிலையில், ஆராய்ச்சி பட்டம் பெற வந்த நாகர்கோவிலை சேர்ந்த ஜீன் ஜோசப் என்ற மாணவி மட்டும் ஆளுநரிடம் பட்டத்தை தராமல் நேரடியாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான சந்திரசேகரிடம் காட்டி அதனை பெற்றுக்கொண்டு வாழ்த்து பெற்றது சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
பட்டத்தை ரத்து செய்ய கோரி வழக்கு
அப்போது பேசிய அந்த மாணவி "தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் எதிராக ஆளுநர் செயல்படுவதால் அவரிடம் பட்டம் வாங்க விரும்பவில்லை" என்றார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஆளுநர் கையால் பட்டம் வாங்க மறுத்த மாணவியின் பட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
மாணவியின் செயல் ஏற்புடையதல்ல
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர், "ஆளுநரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்துகொண்டது ஏற்புடையதல்ல" என்று கூறினார். மேலும் 'இந்த வழக்கானது விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்பதை முடிவு செய்வதற்காக ஒத்தி வைப்பதாக கூறினார்.
அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மனுவில் கூறியது என்ன?
முன்னதாக இந்த மனுவில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் கூறியிருந்ததாவது:- நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது அவரிடம் இருந்து ஆராய்ச்சி மாணவி ஜீன் ஜோசப் என்பவர் பட்டத்தை பெற மறுத்து, துணைவேந்தரிடம் பெற்றுக் கொண்டார்.
வேந்தரிடம் பட்டம் பெற மறுத்தது சட்டவிதி மீறல் ஆகும். மேலும் அந்த மாணவி பட்டமளிப்பு விழா அரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து அரசியல் கருத்துகளை பேசினார். தமிழ்நாட்டிற்கு ஒன்றும் செய்யாத ஆளுநரிடம் நான் ஏன் பட்டம் பெற வேண்டும் என மாணவி கூறுகிறார். மாணவி துணை வேந்தரிடம் இருந்து பெற்ற பட்டம் செல்லத்தக்கது அல்ல.
எனவே அவருக்கு வழங்கிய பட்டத்தை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். பல்கலைக்கழக விதிகளை மீறி மாணவிக்கு பட்டம் வழங்கிய துணைவேந்தர் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று மனுவில் கூறியிருந்தார்.
