5 வருடத்திற்கு முன்பு தங்கம் வாங்கி இருந்தால்.. இப்போ வீடு + பெரிய தொகை இலவசம்- ஆனந்த் சீனிவாசன்.!
ஆனந்த் சீனிவாசன்
தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்குத் தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இதற்கிடையே ஒருவரால் தங்கத்தை வாங்குவதன் மூலம் எப்படிச் செல்வத்தை அசால்டாக சேர்க்க முடியும்..
இதன் பிணனால் இருக்கும் சீக்ரெட் பார்முலா என்ன என்பது தொடர்பாகப் பிரபலப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
தங்கம் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதுதான் உச்சமாக இருக்கும் என நாம் நினைப்பதற்குள் அது புதிய உச்சத்தைத் தொட்டுவிடுகிறது. இதற்கிடையே தங்கம் வாங்குவதன் மூலம் எப்படி ஈஸியாக நம்மால் செல்வத்தை அதிகரிக்க முடியும் என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். தங்கத்தை வைத்தே வீடு தொடங்கிப் பல விஷயங்களைப் பெறலாம் என்பதையும் அவர் எளிமையாக விளக்கியுள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் சேனலில், "கடந்த ஓராண்டுக்கு முன்பு தங்கம் விலை என்னவாக இருந்தது நினைவிருக்க.. அது ரூ.7000 ரேஞ்சில் தான் இருந்தது. ஓராண்டிற்குள் பல சர்வதேச நிகழ்வுகளால் தங்கம் விலை உச்சத்திற்குப் போய்விட்டது.
நான் உதாரணத்திற்குச் சொல்கிறேன்.. ஒரு 5 முதல் 7 வருடத்திற்கு முன்பு ஒருவர் வீடு வாங்குகிறார் என வைத்துக் கொள்வோம். பெரிய தொகை தேவைப்படும். அதில் கணிசமான தொகையை ஹோம் லோனாக தான் எடுத்திருப்பார்கள். வீட்டிற்குப் பதிலாக அந்தத் தொகையில் தங்கத்தை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு 3 முதல் 4 மடங்கு வரை அதிகரித்து இருக்கும்.
மூன்றும் கிடைச்சு இருக்கும்
அப்படித் தங்கம் வாங்கி இருந்தாலும் கூட இன்று உங்கள் பணம் குறைந்தது மூன்று மடங்கு ஆகியிருக்கும். அதில் ஒரு பங்கை விற்று லோனை மூடிவிடலாம்.. இன்னொரு பங்கை விற்று வீட்டை வாங்கி இருக்கலாம்.. இன்னொரு பங்கு தங்கம் அப்படியே இருந்திருக்கும். 1:3 என ஆகியிருக்கும். அதாவது நீங்கள் போட்ட ஒரு ரூபாய் 3 ரூபாயாகக் கிடைத்திருக்கும்" என்றார்.
தங்கம், வெள்ளி வித்தியாசம்
தங்கம், வெள்ளி வித்தியாசம் குறித்துப் பேசிய அவர், "ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.. தங்கம் வேறு, வெள்ளி வேறு.. தங்கத்தை நிச்சயம் யாராக இருந்தாலும் வாங்கலாம்.. ஏனென்றால் நீங்கள் நினைத்தால் தங்கத்தை எப்போது வேண்டுமானாலும் பணமாக மாற்றிக் கொள்ளலாம். வெள்ளியில் அப்படி இல்லை. மேலும், வெள்ளியில் வாங்கும் விலைக்கும் விற்கும் விலைக்கும் பெரிய வித்தியாசம் வரும். வெள்ளியை நீங்கள் சேட்டுக் கடையில் அடகு வைத்தால் 10 ரூபாய் மதிப்பிலான வெள்ளிக்கு ரூ.2 தான் கொடுப்பார்கள். அதேநேரம் தங்கத்திற்கு இது ரூ.7.5 வரை கிடைக்கும். எனவே, தங்கம் தான் சிறந்தது.
லிமிட் இல்லை
இதுதான் லிமிட் என்றெல்லாம் இல்லை. தங்கத்தை வாங்கிக் கொண்டே போகலாம்.. அது ஏறிக் கொண்டே போகும். அவ்வப்போது நின்று மூச்சு வாங்குவது போல சில காலம் ஒரே நிலையில் இருக்கும். பிறகு மீண்டும் அதன் விலை ஏற ஆரம்பிக்கும். தங்கம் விலை இப்போது உச்சத்திற்குப் போய்விட்டது உண்மை தான். ஆனாலும், வேறு வழியில்லை.. பணத்தைச் சேமித்து வைத்தாக வேண்டும்.
நீங்கள் உங்கள் பணத்தை வங்கியில் போட்டு வைத்தால் அது கரைந்து போகும்.. ஏனென்றால் உங்களுக்குக் கிடைக்கும் வட்டி என்பது விலைவாசி உயர்வை விடக் குறைவு. எனவே பணத்தின் மதிப்பு குறையும்.. பங்குச்சந்தையில் போட்டால் விலை ஏறும் இறங்கும். அதேநேரம் தங்கத்தில் போட்டால் அது பாதுகாப்பாக இருக்கும்" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
