வாணியம்பாடி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ருபாய் 6 லட்சம் மதிப்பிலான 23 செம்மர கட்டைகள் பறிமுதல் .!
திருப்பத்தூர்

வாணியம்பாடி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ருபாய் 6 லட்சம் மதிப்பிலான 23 செம்மர கட்டைகள் பறிமுதல். குற்றவாளிகளை தேடி சென்ற போது போலீசார் கண்டுபிடித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு ஊராட்சி கோவிந்தன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் பிரபு(32). இவருடைய மனைவி உமா.
பிரபுவின் தம்பி சக்திவேல்(28) என்பவருக்கும், உமாவுக்கும் கள்ள தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சக்திவேல் அண்ணி உமா மற்றும் அவரது 2 பிள்ளைகளை அழைத்து தலைமறைவாகி குடும்பம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு பிரபு அவருடைய தம்பி சக்திவேலிடம் மனைவி உமா மற்றும் பிள்ளைகள் குறித்து கேட்டுள்ளார். அப்போது அண்ணன் தம்பிக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் தடுக்க சென்ற உறவினர்கள் சம்பத்(50), இவருடைய மகன்கள் உமாபதி(28), விக்னேஷ்(26),பூபதி(24) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
சம்பவம் குறித்து கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேல் உட்பட குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் கோவிந்தன் வட்டம் பகுதியில் சக்திவேல் தங்கி இருந்த வீட்டில் செம்மர கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக கிராம மக்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீஸார் வீட்டை சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வீட்டில் 23 செம்மரக்கட்டைகள்(278 கிலோ) பதுக்கி வைத்து இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து வாணியம்பாடி வனசரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் வாணியம்பாடி வனசரக அலுவலர் குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 23 செம்மர கட்டைகளை(278 கிலோ சுமார் 6 லட்சம் மதிப்பு) பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.