திருப்பரங்குன்றம்: ஜிஆர் சுவாமிநாதன் தீர்ப்பால் மதப் பிரச்சனை அபாயம்.. தமிழக அரசு முன்வைத்த 10 பாயிண்டுகள்.!
தமிழகம்
திருப்பரங்குன்றம்: ஜிஆர் சுவாமிநாதன் தீர்ப்பால் மதப் பிரச்சனை அபாயம்.. தமிழக அரசு முன்வைத்த 10 பாயிண்டுகள்
திருப்பரங்குன்றம் மலையில் தர்கா அருகே உள்ள தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவால் மதப் பிரச்சனை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
திருப்பரங்குன்றத்தில் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது வழக்கம். ஆனால் சிக்கந்தர் தர்கா அருகே உள்ள எல்லைக் கல்தான் தீபத் தூண்; அங்குதான் தீபமேற்ற வேண்டும் என நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனின் இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இந்த மனுவை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தற்போது விசாரித்து வருகிறது.
இன்றைய விசாரணையின் போது தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்தரன் முன்வைத்த வாதங்கள்
கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முன்னரே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுவிட்டது.
நீதிமன்ற அவமதிப்பு நடந்துவிட்டதாக மனுதாரரும் நீதிபதியும் முன்கூட்டியே முடிவுக்கு வந்துவிட்டனர்.
தர்கா அருகே உள்ள எல்லைக் கல்லில் தீபமேற்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் அனுமதித்த தீர்ப்பால், சமூக நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளது; சட்டம் -ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது
நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தீர்ப்பால் மதப் பிரச்சனை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது
தர்கா அருகே உள்ள எல்லைக் கல்லில்10 பேருடன் தீபம் ஏற்ற செல்லலாம் என்பது ஜிஆர் சுவாமிநாதன் தீர்ப்பு; ஆனால் மனுதாரர் ராம ரவிக்குமார், ஒரு பெருங்கூட்டத்தையே கூட்டியிருந்தார்; அவர் மீதுதான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியும்.
எல்லைக் கல்லா? தீபத் தூணா? என்பது தொடர்பாக பதிலளிக்க சிக்கந்தர் தர்கா நிர்வாகத்துக்கு போதிய அவகாசத்தை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் வழங்கவில்லை.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த அன்றே நீதிபதியால் இந்த வழக்கில் தண்டனையும் வழங்கிவிட முடியாது.
ஜிஆர் சுவாமிநாதன் தீர்ப்பின் படி எல்லைக் கல்லில் தீபம் ஏற்ற சென்றவர்களால் போலீசார் தாக்கப்பட்டுள்ளனர்; போலீசார் அமைத்த தடுப்புகள் உடைக்கப்பட்டுள்ளன. ஜிஆர் சுவாமிநாதன் தீர்ப்பை வைத்து கலவரத்தில் ஈடுபட முயன்றனர்.
மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை CISF என்பது நீதிமன்ற பாதுகாப்பு பணிக்கானது மட்டும்தான். அத்தகைய CISF படையை தீபம் ஏற்ற செல்வோருக்கு பாதுகாப்பு வழங்க நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் அனுப்பியது தவறு.
CISF அதிகாரம் என்பது நீதிமன்ற வளாகத்துக்குள் மட்டும்தான்.. அதை தாண்டி கிடையாது. காவல்துறைக்கு இணையாக CISF செயல்பட முடியாது.
