இரும்பு காப்பில் தங்க முலாம் பூசி விற்று வெளிநாடு சென்ற நபரை பிடிக்க போலீசார் திட்டம். !

திருவாரூர்

இரும்பு காப்பில் தங்க முலாம் பூசி விற்று வெளிநாடு சென்ற நபரை பிடிக்க போலீசார் திட்டம். !

திருவாரூர் மாவட்டத்தில் தங்க மோசடி நடந்து, பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது..

கூத்தாநல்லூரை சேர்ந்தவர் தேவராஜ்.. இவர் பஜாரில், அதிஷ்டா கோல்டு கம்பெனி என்ற பெயரில் நகை கடையை வைத்து நடத்தி வருகிறார்.. சம்பவத்தன்று மதியம் 1 மணிக்கு, பாண்டுக்குடி கிராமத்தைச் சேர்ந்த விஜய் என்பவர், அவசரமாக பணம் தேவைப்படுவதால், 4 சவரன் தங்க காப்பை விற்க வேண்டும் என்று சொல்லி நகைக்கடைக்கு வந்துள்ளார்.

தங்க காப்பு - இரும்பு காப்பு

விஜய் உள்ளூரை சேர்ந்தவர் என்பதால், அவரது தங்க காப்பை வாங்கி சோதித்துள்ளனர்.. பிறகு அவரிடம் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களையும்பெற்றுக்கொண்டு, 3 லட்சத்து 35 ஆயிரம் ரூபாயை விஜய்க்கு தந்துள்ளனர்..

பிறகு 10 நாட்கள் கழித்து, விஜய் தந்த தங்க காப்பை உருக்கியபோது, அது தங்கம் இல்லை என்பதும், வெறும் இரும்பு உலோகம் என்பதும் தெரிந்து நகை கடைக்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்க முலாம் பூசிய இரும்பு காப்பை தந்து, மூன்றரை லட்சம் பணத்தையும் விஜய் வாங்கி சென்றுள்ளது பிறகுதான் தெரியவந்தது.

கம்போடியா நாட்டில் விஜய்

பிறகு, நகைக்கடை சார்பில் கூத்தாநல்லூர் போலீஸில் இது தொடர்பாக புகார் தரப்பட்டது.. போலீசாரும் புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்டனர்.

ஆனால் இந்த விஷயம் 10 நாட்களுக்கு பிறகே தெரியவந்ததால், அதற்குள் விஜய் கம்போடியா நாட்டிற்கு பறந்துவிட்டாராம்.. இதையடுத்து, மோசடி பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வெளிநாட்டுக்கு சென்ற விஜய்யை கைது செய்ய தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.