கள்ளக் காதலால் கொலை செய்யப்பட்ட கார் வியாபாரி .! கார் வாங்குவது போல் வரவழைத்து வியாபரி கொலை செய்யபட்ட கொடூரம்.!
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகிலுள்ள முதலூரைச் சேர்ந்தவர் மார்ட்டின் ஸ்டான்லி. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்த இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம், சீவலப்பேரி தோணித்துறை சுடுகாட்டுப் பகுதியில் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சீவலப்பேரி காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மார்ட்டின் ஸ்டான்லியின் உடல் அருகில் மது பாட்டில்கள் கிடந்ததால், நண்பர்களுடன் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் முதல் கட்ட விசாரணையை தொடங்கினர். இச்சம்பவம் தொடர்பாக முருகப்பெருமாள், நம்பிராஜன், கிதியோன் ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில், நம்பிராஜன் என்பவர் ஸ்டான்லியின் நண்பர். இவர்தான் கார் வாங்குவது தொடர்பாக பேச வேண்டும் என மார்ட்டின் ஸ்டான்லியை சீவலப்பேரிக்கு வரச் சொல்லியுள்ளார். கைதான மூன்று பேரும், "மது போதையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்தோம்" எனக்கூறி போலீஸாரை திசை திருப்பினர்.
ஆனால், விசாரணையில் அவர்கள் கூறிய முன்னுக்குப் பின்னான தகவலால் சந்தேகமடைந்த போலீஸார், விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில், ஏமன்குளம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் மார்ட்டின் ஸ்டான்லிக்கு திருமணத்தை மீறிய உறவு (கள்ளக்காதல்) இருந்து வந்துள்ளது.
பழக்கத்தை கைவிடுமாறு அந்தப் பெண்ணின் சகோதரர் பலமுறை ஸ்டான்லியிடம் கூறியும், அவர் பழக்கத்தை கைவிட மறுத்ததால் ஸ்டான்லியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
அவரது தூண்டுதலின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் மார்ட்டின் ஸ்டான்லியை கார் வாங்குவது போல பேசி நாங்குநேரி அருகில் வரவழைத்து அடித்துக் கொலை செய்துள்ளனர்.
கொலையை மறைப்பதற்காகவும் போலீஸாரை திசை திருப்பவும் அவரது சடலத்தை சீவலப்பேரி சுடுகாட்டுப் பகுதியில் போட்டுவிட்டு, அவரது உடலின் அருகில் மதுபாட்டில்களை சிதறவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவத்திற்கு முக்கிய காரணமான அந்த இளம் பெண்ணின் சகோதரரை போலீஸார் தேடி வருகின்றனர்.
