அன்புமணி, இராமதாஸ் இருவரையும் சமாதான பேச்சு வார்த்தைக்கு நீதிபதி அழைத்தது தவறு - தராசு ஷ்யாம் கருத்து. !

பா ம க விவகாரம்

அன்புமணி, இராமதாஸ் இருவரையும் சமாதான பேச்சு வார்த்தைக்கு நீதிபதி அழைத்தது தவறு - தராசு ஷ்யாம் கருத்து. !

சென்னை: பாமக விவகாரத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் வேண்டுகோள் விசித்திரமான ஒன்று என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

இரு தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த ஆனந்த் வெங்கடேஷ் ஒன்றும் மத்தியஸ்தர் அல்ல என்று கூறியுள்ள தராசு ஷ்யாம், ராமதாஸ் மற்றும் அன்புமணியை நேரில் அழைத்தது தவறு என்றும் விமர்சித்துள்ளார்.

பாமகவின் பொதுக்குழுக் கூட்டத்தை அன்புமணி கூட்டி இருக்கும் நிலையில், அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று ராமதாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பிலும் வாதங்களை முன் வைக்க வழக்கறிஞர்கள் தயாராகினர்.

ஆனால் வழக்கறிஞர் பேசுவதற்கு முன்பாக, நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். அதனை நீங்கள் இருவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரையும் மாலை 5.30 மணிக்கு எனது அறைக்கு வரச் சொல்லுங்கள். பாமகவின் நலன் கருதி இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்துகிறேன். இருவரிடமும் தனியாக பேசுகிறேன். அப்போது கட்சிக்காரர்கள் யாரும் உடனிருக்கக் கூடாது. வழக்கறிஞர்களும் தேவையில்லை.

உடனடியாக ராமதாஸை புறப்படச் சொல்லுங்கள். இது எனது வேண்டுகோள் என்று தெரிவித்தார். நீதிபதியின் இந்த பேச்சு இரு தரப்புக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்ந்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பேசுகையில், இருவரையும் நேரில் அழைத்தது தவறு. நீதிபதியின் வேண்டுகோள் இதுவரை பார்க்காத விசித்திரமான ஒன்று.

தந்தை, மகன் இடையில் சொத்து தகராறு என்றால் நீதிபதி சமரசம் செய்து வைக்கலாம். ஆனால் இது சொத்து தகராறு அல்ல.. கட்சியின் உரிமை சம்மந்தப்பட்ட வழக்கு. நீதிபதியின் இந்த அணுகுமுறை இரு தரப்புக்கும் நல்லதல்ல. இரு தரப்பின் நன்மைக்காகப் பேச்சுவார்த்தை நடத்துகிறேன் என்று சொல்வதற்கு நீதிபதிக்கு சட்ட உரிமை இல்லை. நீதிபதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மத்தியஸ்தர் அல்ல.

ஆரம்பக் கட்டத்தில் இருக்கிற ஒரு மனு மட்டும்தான் இது. இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ கட்சிகளின் பிளவுகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்படியொரு விஷயத்தைப் பார்த்ததே இல்லை. மேலும், அன்புமணி பொதுக்குழு தடை விதிக்க வேண்டுமென்றால், மனுவை விசாரித்து நீதிபதி உத்தரவிட்டிருப்பார். அதனால் மாலை 5.30 மணிக்குத் தடையை நோக்கி உத்தரவிட மாட்டார் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அன்புமணி தனது உரிமை மீட்பு சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். ராமதாஸ் தைலாபுரத்தில் இருக்கிறார். இவர்கள் இருவரும் மாலை 5.30 மணிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறைக்கு வருவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. முதற்கட்ட தகவலின்படி இருவருமே சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வர வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.