ஓசூரில், சிவபெருமானுக்கு ஐப்பசி மாத பௌர்ணமி அன்னாபிஷேகம்.!
கிருஷ்ணகிரி
ஓசூரில், சிவபெருமானுக்கு ஐப்பசி மாத பௌர்ணமி அன்னாபிஷேகம் வெகு விமர்சை. லிங்க ரூப ஈஸ்வரனுக்கு அன்னத்தாலும் காய் கனிகளாலும் சிறப்பு அலங்காரங்களுடன் திரளான பக்தர்கள் வழிபாடு.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட டெம்பிள் லேன்ட் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மௌன குரு விநாயகர் திருக்கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமி அன்னாபிஷேக வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த திருக்கோயிலில் ஸ்ரீ மௌன குரு விநாயகர், வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகர், பர்வதவர்தினி அம்மன், ஸ்ரீ பசுபதீஸ்வரர், அனுமன் தக்ஷிணாமூர்த்தி விஷ்ணு துர்க்கை உள்ளிட்ட தெய்வங்கள் தனி சந்நிதி கொண்டு அருள் பாலிக்கின்றனர்.
சுமார் 20 ஆண்டுகளாக இந்த திருக்கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ பசுபதீஸ்வரருக்கு ஐப்பசி மாதம் பௌர்ணமி அன்று அன்னாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்று அன்னதானம் நடைபெறுவது வழக்கம்.
இன்று 21 ஆம் ஆண்டாக ஐப்பசி மாத பௌர்ணமி அன்னாபிஷேகம் சிவபெருமானுக்கு விமர்சியாக நடைபெற்றது. லிங்க வடிவத்தில் காட்சி தரும் சிவபெருமானுக்கு பால் இளநீர் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் ருத்ர பாராயணங்களுடன் நடைபெற்றன.
தொடர்ந்து சிவபெருமானுக்கு அன்னம் மற்றும் காய்கனிகளால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. பின்னர் சிவபெருமானுக்கு மலர்களாலும் தங்க கவசத்தாலும் அலங்கரிக்கப்பட்டு மகா மங்கள பஞ்சமுக தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் அந்தப் பகுதியைச் சேர்ந்த சுமார் 600க்கும் மேற்பட்ட பக்தர்கள் குடும்பத்தோடு வந்திருந்து பங்கேற்று சிவாஷ்டகம் உச்சரித்து பக்தி பரவசத்தில் ஓம் நமச்சிவாயா என்ற கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பின்னர் அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதம் உள்ளடக்கிய அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல ராம் நகர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சோமேஸ்வரர் திருக்கோயிலிலும் சிவபெருமான் சோமேஸ்வரராக எழுந்தருளி காட்சியளிக்கிறார். அவருக்கு அன்னதானம் காய் கனிகளாலும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு அன்னதானம் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
செய்தியாளர்
மாருதி மனோ
