ஏ டி எம் கொள்ளை : கொள்ளையடிப்பது குறித்து பயிற்சியளித்த போலீஸ் உட்பட மூவர் கைது. !
பெங்களூர்
பெங்களூரில் ஏ.டி.எம். மையங்களுக்குப் பணம் நிரப்ப எடுத்துச் செல்லப்பட்ட வாகனத்தை வழிமறித்து ₹7.11 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், ஒரு தலைமைக் காவலர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆறு மாநிலங்களில் 72 மணி நேரம் நீடித்த தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, 200 போலீஸார் கொண்ட தனிப்படையினர் இந்தக் கொள்ளைக் கும்பலைப் பிடித்தனர்.
கொள்ளையின் பின்னணி
கடந்த நவம்பர் 19-ஆம் தேதி, ஏ.டி.எம். வாகனத்தை மறித்த கும்பல், தங்களை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் என்று கூறி வாகனத்தில் இருந்த பணத்தைக் கொள்ளையடித்தது.
திட்டமிட்ட செயல்: கைதான தலைமைக் காவலர் அன்னப்பாதான், இந்தக் குற்றத்தைச் செயல்படுத்தத் தேவையான பயிற்சிகளை இளைஞர்களுக்கு அளித்து, ஆதாரங்கள் கிடைக்காத வகையில் துல்லியமாகத் திட்டமிட்டுள்ளார். வேனில் பணியாற்றிய ஒருவர், வேன் குறித்த தகவல்களைக் கூட்டாளிகளுக்குக் கொடுத்து உதவியுள்ளார்.
கைது செய்யப்பட்டோர்
குற்றவாளிகளைப் பிடிக்க 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 54 மணி நேரத்திற்குள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்:
அன்னப்பா: கோவிந்தபுரா காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்.
சேவியர்: சி.எம்.எஸ். இன்ஃபோசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் (பணம் எடுத்துச் செல்லும் நிறுவனம்) முன்னாள் ஊழியர்.
கோபி: வாகனப் பொறுப்பாளர்.
இந்தக் கொள்ளைச் சம்பவத்துக்கு மூன்று மாதங்களாகத் திட்டம் தீட்டப்பட்டு, சி.சி.டி.வி. கேமரா இல்லாத பாதைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கொள்ளைச் சம்பவத்தை நிறைவேற்றியதில் 8 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டிருந்ததும், கைதாவதிலிருந்து தப்பிக்க வாட்ஸ்அப் கால் மூலம் பல்வேறு மொழிகளில் பேசியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது
