கண் இமைக்கும் நேரத்தில் 26,000 அடி சரிந்த விமானம். ! கண்ணீர் விட்டு கதறிய பயணிகள். !
போயிங் விமானம்

டோக்கியோ: ஏர் இந்தியா விபத்திற்குப் பிறகு விமானங்களில் ஏற்படும் பாதுகாப்பு குறைபாடுகள் பேசும் பொருள் ஆகிவருகிறது.
அப்படித் தான் ஷாங்காயிலிருந்து டோக்கியோவிற்கு சென்ற ஜப்பான் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் ஒன்று, வெறும் சில நொடிகளில் சுமார் 26,000 அடி இறங்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட திடீர் அழுத்தத்தைச் சமாளிக்க மக்கள் ஆக்சிஜன் மாஸ்குகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.
கடந்த மாதம் ஏர் இந்தியா விமானம் குஜராத்தில் விபத்தில் சிக்கியதில் ஒரே ஒரு பயணியைத் தவிர அனைவரும் உயிரிழந்தனர். இந்தியாவில் நடந்த மிக மோசமான இந்த விபத்து உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக போயிங் விமானங்களின் பாதுகாப்பு குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
26 ஆயிரம் அடி சரிந்த விமானம்
இதற்கிடையே மீண்டும் அப்படியொரு சம்பவம் இப்போது நடந்துள்ளது. சவுத் சீனா மார்னிங் போஸ்ட் இது குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளது. அதாவது ஷாங்காயிலிருந்து டோக்கியோவிற்கு சென்ற ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் திடீரெனச் சில நொடிகளில் 26,000 அடிக்குச் சரிந்துள்ளது. போயிங் 737 ரக விமானம் திடீரென இப்படிச் சரிந்ததால் பயணிகள் மூச்சுவிடவே சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் ஆக்சிஜன் மாஸ்குகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.
ஜப்பான் ஏர்லைன்ஸ் மற்றும் ஸ்பிரிங் ஜப்பான் ஆகியவை இணைந்து இயக்கிய விமானத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. நடுவானில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாகவே இதுபோல நடந்துள்ளது. இதையடுத்து விமானம் கன்சாய் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. சுமார் 36,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரெனப் பத்தே நிமிடங்களில் 10,500 அடிக்குச் சரிந்துள்ளது.
மூச்சு விட முடியல
இந்தச் சம்பவம் நடந்தபோது விமானத்தில் 191 பயணிகள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர். நல்வாய்ப்பாக உள்ளே இருந்த பயணிகள் யாருக்கும் இந்தச் சம்பவத்தால் உடல்நிலை பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும், விமானத்தில் இருந்த அழுத்தம் திடீரென மாறியதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் ஆக்சிஜன் மாஸ்க் பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
விமானம் திடீரெனச் சரிந்தவுடன் பயணிகள் பலரும் விமானம் விபத்துக்குள்ளாகும் என்றே அஞ்சினர். தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே பயணிகள் தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். பயணி ஒருவர், "என்னால் அதை மறக்க முடியாது. என் கால்கள் இன்னும் நடுங்குகின்றன. வாழ்க்கையில் மரணத்தை நீங்கள் எதிர்கொள்ளும்போது, மற்ற அனைத்தும் அற்பமானதாகத் தெரியும்" என்று பதிவிட்டுள்ளார்.
கண்ணீர் விட்டு கதறல்
மற்றொரு பயணி கூறுகையில், "சுமார் இரவு 7 மணியளவில் விமானம் திடீரெனக் கீழே இறங்க ஆரம்பித்தது. 20 நிமிடங்களில் 3,000 மீட்டர் வரை இறங்கியது" என்றார். பயணிகள் பலரும் கண்ணீர் விட ஆரம்பித்துவிட்டனர். இன்னும் சிலர் கடைசியாக அனுப்ப வேண்டிய தகவல்கள், முக்கியமான விஷயங்களை டைப் செய்தும் அனுப்ப முயன்றுள்ளனர். அந்தளவுக்குப் பயணிகள் நடுங்கிப் போனார்கள்.
விமானம் ஜப்பான் ஒசாகாவில் தரையிறங்கியபோது யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்தச் சம்பவத்திற்கு இழப்பீடாக 104 டாலர் வழங்கப்பட்டது. மேலும், அங்கு ஹோட்டலில் தங்குவதற்கும் ரூமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
சர்ச்சையில் போயிங் 737
இந்த வகை போயிங் 737 ரக விமானம் இதற்கு முன்பும் பல சிக்கல்களில் சிக்கியுள்ளது. கடந்த ஆண்டு, ஜெஜு ஏர் போயிங் 737-800 விமானம் தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. இதில் 179 பேர் உயிரிழந்தனர். இரண்டு விமான ஊழியர்கள் மட்டுமே உயிர் பிழைத்தனர். சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான அதே போயிங் மாடல் விமானம் தான் மார்ச் 2022இல் மற்றொரு விபத்திலும் சிக்கியது.