அமெரிக்காவில் இருக்கும் தங்கத்தை திரும்பப் பெறும் ஐரோப்பா நாடுகள். !
தங்கம்

நியூயார்க்: கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் சேமித்து வைத்து இருந்த தங்கத்தை உலக நாடுகள் திருப்பி எடுக்க தொடங்கி உள்ளன.
முக்கியமாக அமெரிக்காவில் இருந்து ஐரோப்பா தனது தங்கத்தை திரும்பப் பெற விரும்புகிறது.
ஐரோப்பாவின் நாடுகள் அமெரிக்காவின் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்து வருகின்றன. பல ஆண்டுகளாக ஐரோப்பாவின் தங்கத்தை அமெரிக்கா பாதுகாத்து வருகிறது. சொல்லப்போனால், ஐரோப்பாவின் ஆயிரக்கணக்கான டன் தங்கம் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகள் தங்கள் தங்கத்தை திரும்பக் கேட்கின்றன. இதற்கான காரணம்? டொனால்ட் ட்ரம்ப் மீது அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையின்மைதான் முக்கியமான காரணம் என்கிறார்கள் உலக அரசியல் வல்லுனர்கள். தங்கத்தை அரசியல் ஆயுதமாக அவர் பயன்படுத்தக்கூடும் என்ற அச்சமும் ஒரு காரணம்.
3ம் உலகப்போர்
மூன்று உலகப் போர்கள் உருவாகும் சூழல் இருப்பதால், நாடுகள் தங்கள் தங்க இருப்புகளைப் பாதுகாக்க நினைக்கின்றன. புயலுக்கு முன் அமைதி நிலவுவது போல, ஐரோப்பிய நாடுகள் சூறாவளி அடிக்கும் முன் தங்கள் இருப்புகளைப் பாதுகாக்க நினைக்கின்றன. அமெரிக்கா ஏன் ஐரோப்பாவின் தங்கத்தை வைத்திருக்கிறது என்ற கேள்வி உங்களுக்கு எழலாம்... 20-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட நிலையற்ற தன்மையே இதற்குக் காரணம். பனிப்போரின்போது, ஐரோப்பிய நாடுகளின் தங்கம் பாதுகாப்பிற்காக அமெரிக்காவில் வைக்கப்பட்டது.
அமெரிக்காவில் ஜெர்மனி மற்றும் இத்தாலியின் தங்க இருப்பு
ஜெர்மனியின் தங்கத்தில் சுமார் 37% அமெரிக்காவிலும், இத்தாலியின் தங்கத்தில் 43% அமெரிக்காவிலும் உள்ளது. அமெரிக்கா இப்போது மேற்கொள்ளும் மோதல்கள், நிலையற்ற நிதிச் சந்தை, டொனால்ட் ட்ரம்பின் போர் அபாயம் போன்ற காரணங்களால், ஐரோப்பா தனது தங்கத்தை திரும்பப் பெற விரும்புகிறது.
ட்ரம்பின் வரும் நாட்களில் பெடரல் ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் தலையிடலாம் என்ற அச்சம் ஐரோப்பிய தலைவர்களுக்கு உள்ளது. TAE (Taxpayers Association of Europe) தலைவர் மைக்கேல் ஜேகர் இதுகுறித்து கூறுகையில், "ட்ரம்பின் தலையீடு பெடரல் ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை பாதிக்கும் என்று நாங்கள் கவலைப்படுகிறோம்" என்றார்.
தங்கம் திருப்பித் தரப்படாவிட்டால் என்ன நடக்கும்?
நாம் டிஜிட்டல் பணத்தை பயன்படுத்தினாலும், தங்கம் இன்னும் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார சக்தியின் அடையாளமாகவே உள்ளது. எதிர்கால நெருக்கடிகளை சமாளிக்கவும், சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும் தங்கம் ஒரு முக்கிய காரணியாக விளங்குகிறது. எந்த நாடும் அமெரிக்காவைச் சார்ந்து இருக்க விரும்பவில்லை.
அமெரிக்கா தங்கத்தை திருப்பித் தர மறுத்தால், அது ஒரு பெரிய ராஜதந்திர நெருக்கடியை உருவாக்கும். ஜெர்மனி மற்றும் இத்தாலி இரண்டு நாடுகளின் உறவின் முறிவாகக் கருதலாம். இது இருதரப்பு உறவுகளை மட்டுமல்ல, சர்வதேச நிதி அமைப்பையும் பாதிக்கும். எனவே, அமெரிக்கா தங்கத்தை திருப்பித் தருவது கட்டாயம். இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர்மனியின் தங்கம் மார்ஷல் திட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்காவிற்கு மாற்றப்பட்டது. ஆனால், அந்தத் தங்கம் முழுமையாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் எவ்வளவு தங்கத்தை அமெரிக்கா திருப்பி தரும் என்ற கேள்வி உள்ளது.
தங்க இருப்பை அதிகரித்த ரிசர்வ் வங்கி
அதேபோல் 2024-25 நிதியாண்டில் ரிசர்வ் வங்கி (RBI), வெளிநாட்டுக் கருவூலங்களிலிருந்து 100.32 மெட்ரிக் டன் தங்கத்தை இந்தியாவிற்கு திரும்பக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள தங்கத்தின் இருப்பு 200.06 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.
உலகப் பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மை காரணமாக, ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. குறிப்பாக, உலகின் மிகப்பெரிய பொருளாதாரமான அமெரிக்காவில் அரசியல் மாற்றங்கள், வர்த்தக வரிகள், பொருளாதார மந்தநிலை அபாயங்கள் போன்ற காரணங்களால் நிச்சயமற்ற சூழ்நிலை நிலவுகிறது. இதுபோன்ற சூழலில், தங்கத்தின் இருப்பு ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) அறிக்கையின்படி, மார்ச் 31, 2025 அன்று வெளிநாடுகளில் இருந்த இந்திய தங்கத்தின் அளவு 367.60 மெட்ரிக் டன்னாக குறைந்துள்ளது. இது மார்ச் 31, 2024 அன்று 413.79 மெட்ரிக் டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பொதுவாக, பொருளாதாரத்தில் நிச்சயமற்ற சூழ்நிலைகள் அதிகரிக்கும்போது, மத்திய வங்கிகள் தங்கம் போன்ற பாதுகாப்பான சொத்துக்களில் முதலீடு செய்வதை அதிகரிக்கின்றன. இந்தியாவில் தங்கத்தை வைத்திருப்பது, தேவைப்படும்போது அதனைப் பயன்படுத்தி உள்ளூர் தங்கத்தின் விலையை கட்டுப்படுத்தவும் ரிசர்வ் வங்கிக்கு உதவுகிறது.