இரவோடு இரவாக அமெரிக்கா எடுத்த முடிவு.. தங்கம் மார்கெட்டிற்கு விழுந்த பேரிடி.. இனிமேல் தான் ஆட்டமே.!

அமெரிக்கா

இரவோடு இரவாக அமெரிக்கா எடுத்த முடிவு.. தங்கம் மார்கெட்டிற்கு விழுந்த பேரிடி.. இனிமேல் தான் ஆட்டமே.!

வாஷிங்டன்: அமெரிக்க ரிசர்வ் வங்கி நேற்றிரவு மிக முக்கியமான முடிவை எடுத்திருந்தது. அமெரிக்கப் பொருளாதாரத்தை மனதில் வைத்து இந்த முடிவை பெடரல் வங்கி எடுத்திருந்தது.

தங்கம் விலை வரும் காலத்தில் எப்படி இருக்கும் என்பதை இதுவே முடிவு செய்யும். அமெரிக்க பெடரல் வங்கி எடுத்த இந்த முடிவு என்ன! இது எந்தளவுக்கு முக்கியம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!

நமது நாட்டில் ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றி அமைக்கும். ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு எந்தளவுக்கு வட்டியைக் கொடுக்கிறது என்பது தான் இந்த ரெப்போ ரேட்.! சமீபத்தில் தான் இந்தியாவில் ரெப்போ வட்டி விகிதம் 5.25%ஆகக் குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

அமெரிக்க பெடரல் வங்கி

கிட்டத்தட்ட இதேபோலத் தான் அமெரிக்க பெடரல் வங்கியும் வட்டி குறைப்பு குறித்த முடிவுகளை எடுக்கும். இந்தாண்டு அமெரிக்க பெடரல் வங்கி ஏற்கனவே இரண்டு முறை வட்டி குறைப்பைச் செய்த நிலையில், டிசம்பர் மாதத்திற்கான கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இரு நாட்கள் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து நேற்றிரவு அமெரிக்க பெடரல் வங்கி தனது வட்டி விகிதம் குறித்த முடிவை அறிவித்தது.

வட்டி விகித குறைப்பு

நடப்பு ஆண்டில் மூன்றாவது முறையாக பெடரல் வங்கி வட்டி விகிதத்தை 0.25% குறைத்தது. இதன் மூலம் அங்கு வட்டி விகிதம் 3.5-3.75% என்ற ரேஞ்சை அடைந்துள்ளது. கொரோனா காலத்திற்குப் பிறகு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்தது. இந்தச் சூழலில் தான் இந்தாண்டு தொடக்கம் முதல் வட்டி குறைப்பை மேற்கொண்டு வருகிறது. நடப்பாண்டில் 3வது முறையாக இப்போது வட்டி குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது கடந்த சுமார் மூன்று ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச வட்டியாகும்.

அமெரிக்காவின் வட்டி குறைப்பிற்கும் தங்கத்திற்கும் நேரடியாகவே தொடர்பு இருக்கிறது. அமெரிக்க பெடரல் வங்கி வட்டியை அதிகரிக்கும்போது எல்லாம் தங்கம் விலை குறையும்.. வட்டி விகிதத்தைக் குறைக்கும்போது எல்லாம் தங்கம் விலை உயரும். அப்படிப் பார்த்தால் இப்போது தங்கம் விலை பெரியளவில் உயர்ந்திருக்க வேண்டும். ஆனால், இன்று இந்தியாவில் தங்கம் விலை கிராமுக்கு வெறும் 20 ரூபாய் மட்டுமே உயர்ந்தது. இதற்குக் காரணமே அமெரிக்க பெடரல் வங்கி தலைவர் ஜொரோம் பவுல் சொன்ன கருத்துகள் தான்.

முக்கிய கருத்துகள்

அதாவது அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரி விதிப்பால் விலைவாசி உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார். அமெரிக்கப் பொருளாதாரத்தைக் காப்பாற்றுகிறேன் எனச் சொல்லி டிரம்ப் உலக நாடுகள் மீது வரி விதித்தது அனைவருக்கும் தெரியும். அப்போதே இந்த வரியால் அமெரிக்கர்களுக்கே செலவுகள் அதிகரிக்கும் எனப் பல்வேறு தரப்பினரும் எச்சரித்து வந்தனர். அவர்கள் சொன்னது போலவே அமெரிக்காவில் விலைவாசி அதிகரித்துள்ளதாக பெடரல் வங்கி அறிவித்துள்ளது.

இதனால் அடுத்தாண்டு குறைந்தபட்சம் ஒரு வட்டி குறைப்பு செய்யப்படும் என்பது போலக் கூறியிருந்தார். பெடரல் வங்கி கூட்டம் ஆண்டுக்கு 8 முறை நடக்கும் நிலையில், ஒரு முறை மட்டுமே வட்டி குறைப்பு என்பதை முதலீட்டாளர்கள் நல்ல விஷயமாகப் பார்க்கவில்லை. தங்கம் விலை பெரியளவில் உயராமல் இருக்க இதுவும் முக்கிய காரணம்.

கருத்து வேறுபாடுகள்

அதேபோல அமெரிக்க பெடரல் வங்கியிலும் கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளன. ரிசர்வ் வங்கி குழு உறுப்பினர்கள் பொதுவாக வட்டி குறைப்பு விவகாரங்களில் ஒருமித்த முடிவுகளையே எடுப்பார்கள். ஆனால், இந்த முறை கருத்து வேறுபாடுகள் அதிகரித்திருந்தன. இதனால் 0.25% வட்டி குறைப்பிற்கு எதிராக 3 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதுபோன்ற காரணங்களாலேயே தங்கம் விலை பெரியளவில் உயரவில்லை. இருப்பினும், அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிக்கும்போது தங்கம் விலை உயரவே செய்யும்.