திருப்பூர் மாநகராட்சியை எதிர்த்து வட மாநிலத்தவர்கள் போராட்டம்.!

திருப்பூர்

திருப்பூர் மாநகராட்சியை எதிர்த்து வட மாநிலத்தவர்கள் போராட்டம்.!

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளைக் அகற்றுவதற்கு போதிய இடம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் இல்லாததால், மாநகராட்சி குப்பைகள் மாநகருக்கு வெளியே பல்வேறு பகுதிகளில் பாறைக்குழிகளில் கொட்டி வந்தது.

தற்போது மாற்று இடங்களில் குப்பைகளை தேடி தேடி கொட்டி வருகிறது. அப்படித்தான் திருப்பூர் சிறு பூலுவபட்டி பகுதியில் குப்பை கொட்டப்படுகிறது. இதை கண்டித்து அங்கு வசிக்கும் வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

திருப்பூர் மாநகராட்சி ஒரு காலத்தில் மிகச்சிறிய ஊராக இருந்தது. பல்லடம், அவினாசி தான் அந்த காலத்தில் பெரிய ஊராக இருந்தது. ஆனால் ரயில் சந்திப்பு என்பது திருப்பூரில் தான் சுற்றுவட்டார மக்களுக்கு இருந்தது. இந்நிலையில் திருப்பூரில் பனியன் தொழில் சீரான வேகத்தில் வளர்ந்த நிலையில், உள்ளூர் மக்களை தாண்டி, பல்வேறு மாவட்ட மக்கள் வந்து திருப்பூரில் குடியேறினார்கள்.

இதனால் 90களுக்கு பிறகு ஓரளவு வேகமாக வளர்ந்தது. அதேநேரம் 2000க்கு பிறகு திருப்பூர் அசுர வளர்ச்சி அடைய தொடங்கியது.

திருப்பூர் உள்கட்டமைப்பு

மெல்ல மெல்ல வடமாநில தொழிலாளர்கள் வர ஆரம்பித்தனர். இப்போது சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான வடமாநில தொழிலாளர்கள் திருப்பூரில் வசிப்பதாக கூறப்படுகிறது.

திருப்பூரில் ஏராளமான தொழிற்சாலைகளும் வளர்ந்தன. திருப்பூர் நகரம் மாநகரமாக மாறியது. திருப்பூர் தற்போதும் வேகமாக வளர்ந்து வருகிறது.

ஆனால் திருப்பூரின் வளர்ச்சி வேகத்திற்கு ஏற்ப அங்கு உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது சவாலாக மாறி உள்ளது. குறிப்பாக கழிவு நீர் மேலாண்மை, குப்பை மேலாண்மை சிக்கலாகி உள்ளது.

சிறுபூலுவபட்டியில் குப்பை

இந்த நிலையில் திருப்பூர் 25 வது வார்டு சிறுபூலுவபட்டி அருகில் உள்ள அம்மன் கல்யாண மண்டபம் பகுதியில் மாநகராட்சி இரண்டாம் நிலை சேகரிப்பு பகுதியாக வார்டு முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டி சேகரித்து வைத்திருக்கிறார்கள்.

இவ்வாறு குப்பை கொட்டுவதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி அந்த பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்யும் 300 க்கும் மேற்பட்ட வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். கிளீன் கரோ கிளீன் கரோ என்று இந்தியில் அவர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வடமாநில தொழிலாளர்கள் போராட்டம்

இதையடுத்து விரைந்து வந்த போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றதால் அவர்கள் கைதுக்கு ஒத்துழைக்க மறுத்தனர். இதனால் போலீசாருக்கு அவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு பரபரப்பு ஏற்பட்டது. மறியலை நடத்திய சிலரை போலீசார் கைது செய்தபோது வடமாநில தொழிலாளர்கள் இந்தியில் சத்தமிட்டபடி போலீசார் வாகனத்தை சுற்றி வளைத்தனர். போலீசார் வலுக்கட்டாயமாக சிலரை கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். மேலும் மற்றவர்களை நிறுவனத்துக்குள் விரட்டி விட்டனர். அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.