இந்தியாவில் போன ரஷ்ய அதிபர் புதினின் மலத்தை சூட்கேஸில் வைத்து கொண்டு செல்வது ஏன்? மலத்தில் இவ்வளவு விசயமா?

விளாடிமிர் புதின்

இந்தியாவில் போன ரஷ்ய அதிபர் புதினின் மலத்தை சூட்கேஸில் வைத்து கொண்டு செல்வது ஏன்? மலத்தில் இவ்வளவு விசயமா?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் மலம் கூட சூட்கேஸில் பாதுகாக்கப்பட்டு ரஷ்யாவுக்குச் செல்கிறது ஏன் என்பது குறித்து சிவகங்கை அரசு மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் மலம் கூட சூட்கேஸில் பாதுகாக்கப்பட்டு ரஷ்யாவுக்குச் செல்கிறது. ஏன் மலத்திற்குக் கூட இத்தனை பாதுகாப்பு? மலத்தை வைத்து என்ன கண்டறிய முடியும்?

ஒருவரின் மலத்தை வைத்து அப்படி என்னென்ன கண்டறிய முடியும்? வாங்க பார்க்கலாம். ஒருவர் உண்ணும் உணவானது அவரது ஜீரண மண்டலத்தால் செரிமானம் செய்யப்பட்டு குடலில் உள்ள பாக்டீரியாக்களால் நொதித்தலுக்கு உள்ளாகி மலமாக மாற்றம் அடைகிறது.

மலத்திற்கு அதன் மஞ்சள் நிறத்தைத் தருவது கல்லீரலில் இருந்து உண்டாகும் பிலிருபின் வளர்சிதை மாற்றம் அடையும் போது கிடைக்கும் ஸ்டெர்கோபிலின் ஆகும். இப்படியாக ஒருவர் மலம் இருப்பதை வைத்தும் அதன் தன்மையை வைத்தும் நம்மால் சில நோய்களை இனங்காண முடியும். இதை ஏழு வகையாக ப்ரிஸ்டோல் ஸ்டூல் சார்ட் வகைப்படுத்துகிறது.

முதல் வகை

ஆட்டுப் புழுக்கை போல தனித்தனி கடினமான புழுக்கையாக வெளியேறுவது, இவருக்கு தீவிரமான மலச்சிக்கல் இருக்கிறது என்று அர்த்தம்.

இரண்டாவது வகை

பெரிய கடினமான நீர்தன்மையற்ற கட்டியாக வெளியேறுகிறது என்றால் இவருக்கும் மிதமான மலச்சிக்கல் இருக்கிறது என்று அர்த்தம்.

மூன்றாவது வகை

இரண்டாவது வகையை விட சற்று பெரிதாக அதே சமயம் இலகுவாக நீர்ச்சத்துடன் சில வெடிப்புகளுடன் மலம் வருவது நார்மல்.

நான்காவது வகை

பாம்பு போல இலகுவாக நீர்ச்சத்துடன் மலம் இலகுவாக வருவதும் நார்மல்.

ஐந்தாவது வகை

மிருதுவான தன்னந்தனி கட்டிகள் வந்து விழுந்தால் உணவில் நார்ச்சத்து பற்றாக்குறை என்பதை உணர்க.

ஆறாவது வகை

தனித்தனி கட்டிகளாக இல்லாமல் ஒன்றோடு ஒன்று பிணைந்து கொண்டு பேஸ்ட் போன்று வெளியே வருவது குடலில் ஏதோ உள்காயம் / அழற்சி / தொற்று / புண் இருப்பதை உணர்த்துகிறது.

ஏழாவது வகை

எந்த திடமான கட்டியும் இல்லாமல் முழுத் தண்ணியாக போவது இது வயிற்றுப் போக்கிலும்/ குடல் அழற்சியிலும் ஏற்படலாம்.

மலத்தை நேரில் பார்த்து சில நோய்களை அறியலாம்.

நார்மல் மலம் = பிரவுன் நிறத்தில் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கலாம்.

சிவப்பு நிற மலம் = குடலில் ரத்தக் கசிவு அல்லது குடல் சார்ந்த அழற்சி நோய் இருக்கலாம்.

பச்சை நிற மலம் = பாக்டீரியா கிருமித் தொற்று / இரிடபிள் பவல் சிண்ட்ரோம்

கருப்பு நிற மலம் = மேல் ஜீரண மண்டலத்தில் குறிப்பாக இரைப்பையில் புண் ஏற்பட்டு ரத்தக் கசிவு வந்தால் அந்த ரத்தம் மலத்தை அடையும் போது கருப்பாக மாறும் / இரும்புச் சத்து மாத்திரைகள் சாப்பிடும் போதும் மலம் கருப்பாகச் செல்லும்.

முழு அடர்த்தியான மஞ்சள் - கணைய அழற்சி அல்லது சீலியாக் அழற்சி நோய் பழுப்பு / வெள்ளை நிற மலம் - பித்தப்பை / கல்லீரல் / கணையம் சார்ந்த பிரச்சனை.

பித்தநீர் அடைப்பினால் ஏற்படும் மஞ்சள் காமாலையிலும் இவ்வாறு நிகழும்.

தற்போது மலத்தை பரிசோதனைக்கு அனுப்பினால் என்னென்ன கண்டறியலாம். பார்ப்போம். முதலில் தொற்று நோய்களுக்கு வருவோம்.

பாக்டீரியாக்கள்

டைபாய்டு - சால்மொனெல்லா

சீத பேதி - ஷிகெல்லா

சிறுநீர் பாதை / குடல் தொற்று - ஈ கோலை

காலரா - விப்ரியோ காலரா

ப்ளேகு- யெர்சீனியா பெஸ்டிஸ்

இரைப்பைபுண்- ஹெச் பைலோரி

குடல் புண் - கேம்பைலோ பேக்டர் ஜெஜூனி

வைரஸ்கள்

பேதி - ரொட்டா வைரஸ்

நோரோ வைரஸ் - மேல் சுவாசப்பாதை தொற்று

அடினோ வைரஸ் - மேல் சுவாசப்பாதை தொற்று

ஹெப்பாடைட்டிஸ் ஏ & ஈ - கல்லீரல் பாதிப்பு

எண்டரோ வைரஸ் - குடல் நோய்

புழுக்கள்

ஜியார்டியா

எண்டமீபா ஹிஸ்டாலிடிக்கா

ஊசி புழு

கொக்கி புழு

நாடாப்புழு

என்று பல விதமான தொற்று வியாதிகளை மலத்தின் மூலம் அறிந்திட முடியும்.

தொற்றா நோய்களைப் பொருத்தவரை ஒருவருக்கு குடல் சார்ந்த அழற்சி நோய்கள் ( Inflammatory bowel disease) சீலியாக் நோய் குடல் புற்று நோய் (Colo rectal cancer) இருப்பதை மலத்தில் இருந்து அறிந்து விட முடியும்.

மலத்தில் இருந்து Occult blood test எடுப்பதன் மூலம் இரைப்பை குடல் ரத்தக் கசிவு , மலத்தை எதிர்ப்பு சக்தி சார்ந்த ரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தும் போது நம்மால் வயிற்றில் இருக்கும் புண், மூல நோய், குடலில் ஏற்படும் குருத்துகள் முதற்கொண்டு அறிந்து கொள்ள முடியும்.

மலத்தில் அதிகப்படியான அளவு கொழுப்பு இருக்கும் போது நோயருக்கு உணவை கிரகிப்பதில் கோளாறு இருப்பதை அறிய முடியும் - கணையம் சார்ந்த பிரச்சனை இருக்கலாம். இவையன்றி மலத்தை மரபணுக்கூறு பரிசோதனை செய்யும் போது குறிப்பிட்ட புற்றுநோய்களை உண்டாக்கும் மரபணுக்களை பிரித்தெடுக்க முடியும்.

கூடவே அவரது குடலில் உள்ள கட் பாக்டீரியா எனப்படும் பாக்டீரியா காலனிகளின் தன்மையை அறிந்து கொள்ள முடியும். அதை வைத்து அவருக்கு புற்று நோய், குடல் அழற்சி, உடல் பருமன், நீரிழிவு, பார்கின்சன், பதட்டம், மனச்சோர்வு ஆகிய நோய்கள் இருக்கின்றவனா என்பதை அறிய முடியும்.

இத்துடன் ஒருவர் உட்கொள்ளும் மருந்துகளை மலத்தில் பிரித்தெடுத்து அவருக்கு இருக்கும் நோய் நிலையை அறியலாம். ஃபீகல் ப்ரோடியோமிக்ஸ் எனும் தொழில்நுட்பத்தை உபயோகித்து மலத்தில் வெளியேறும் டிஎன்ஏ, புரதம் மற்றும் வளர்சிதை மாற்ற காரணிகள் ஆகியவற்றை வைத்து நோயரின் நோய்க்கு தேவையான சரியான மருந்துகளைக் கூட உருவாக்க முடியும்.

இன்னும் மலம் சார்ந்த மருத்துவ அறிவியல், அடிக்கடி அபாயகரமான க்ளாஸ்ட்ரிடியம் டிஃபிசில் தொற்றுக்கு உள்ளாகுபவர்களுக்கு வேறொருவர் மலத்தில் இருந்து நல்ல பாக்டீரியாக்களை மாற்றும் மல நுண்ணுயிர் மாற்று சிகிச்சைகள் >90% நல்ல பலன் அளித்து வருகின்றன.

புதினைப் பொருத்தவரை அவர் ரஷ்ய அதிபர் ஆனதில் இருந்து இப்போது வரை தனிநபர் பாதுகாப்புக்கு பெயர் போனவர். தனது டிஎன்ஏ தனது மலம் வழி கூட கிடைத்து விடக்கூடாது என்பதில் தெள்ளத்தெளிவாக இருக்கிறார்.

இவரது உடல் சார்ந்து இருக்கும் பந்தோபஸ்துக்கு "புதின் பயாலஜிகல் ஷீல்டு" என்று பெயர். இதன் மூலம் புதின் உண்ணுவது, பருகுவது, கழிப்பது என அனைத்துமே பாதுகாக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.