டாக்காவில் இந்தியாவிற்கு எதிராக கோசமிட்டுச் சென்ற கூட்டத்தினை தடுத்து நிறுத்திய வங்கதேச போலீசார். !

இந்தியா - வங்கதேசம்

டாக்காவில் இந்தியாவிற்கு எதிராக கோசமிட்டுச் சென்ற கூட்டத்தினை தடுத்து நிறுத்திய வங்கதேச போலீசார். !

வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்ததில் இருந்து, இந்தியாவுக்கான சுமூக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

அந்நாட்டில் நடைபெற்ற மாணவர் போராட்டம் கலவரமானதை தொடர்ந்து, அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.

இந்நிலையில், அவரை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி, இந்தியாவை பல வழிகளில் வங்கதேசம் கோரிக்கையாகவும், மறைமுக மிரட்டலாகவும் விடுத்து வருகிறது. இதனால், இரு நாடுகளிடையேயான உறவில் மேலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த 15-ஆம் தேதி டாக்காவில் நடந்தப் பொதுக்கூட்டத்தில், நேஷனல் சிட்டிசன் கட்சி தலைவர் ஹஷ்நத் அப்துல்லா உரையாற்றினார். அப்போது அவர், 'பிரிவினைவாத மற்றும் இந்தியா எதிர்ப்பு சக்திகளுக்கு தங்குமிடம் அளிப்போம் என்றும், அருணாசலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களை இந்தியாவிலிருந்து துண்டிக்க வங்கதேசம் உதவும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

அத்துடன், இந்தியாவின் இறையாண்மை, மனித உரிமைகளை மதிக்காத சக்திகளுக்கு (ஷேக் ஹசீனா) இந்தியா தங்குமிடம் அளித்தால், வங்கதேசமும் அதற்குப் பதிலடி கொடுக்கும்,' எனவும் சவால் விடுத்தார். அதனை அங்கிருந்தவர்கள் கரகோஷமிட்டு,வரவேற்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிராக வங்கதேச அரசியல் தலைவர் ஒருவர் சர்ச்சையாக பேசியது குறித்து விளக்கம் கேட்டு, வங்கதேச தூதர் முகமது முஸ்தாபிஸூருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியது.

இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

''வங்கதேசத்தில் சமீபத்தில் நடந்த சில நிகழ்வுகள் குறித்து தீவிரவாத சக்திகளால் உருவாக்கப்படும் தவறான சித்தரிப்பை இந்தியா முழுமையாக நிராகரிக்கிறது. இந்த சம்பவங்கள் தொடர்பாக இடைக்கால அரசு, முழுமையான விசாரணை நடத்தவில்லை, என்பதும், இந்தியா உடன் அர்த்தமுள்ள ஆதாரங்களைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்பதும் துரதிர்ஷ்டவசமானது.

வங்கதேச மக்களுடன் இந்தியா நெருங்கிய நட்புறவை கொண்டுள்ளது. இந்த உறவுகள் பல்வேறு வளர்ச்சி மற்றும் இரு நாட்டு மக்களுக்கு இடையிலான முன்னெடுப்புகள் மூலம் வலுப்படுத்தப்பட்டுள்ளன. வங்கதேசத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஆதரவாக இந்தியா உள்ளது. தூதரக ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஷேக் ஹசீனாவை திரும்ப ஒப்படைக்க வலியுறுத்தி டாக்காவில் உள்ள இந்திய தூதரகம் நோக்கி, அந்நாட்டை சேர்ந்தவர்கள் பலர் பேரணியாக சென்றனர். இந்தியாவுக்கு எதிராக கோஷம் போட்ட படி சென்றனர். அவர்களை அந்நாட்டு போலீசார் தடுத்து நிறுத்தினர். தூதரகத்துக்கு கூடுதல் பாதுகாப்பையும் அளித்தனர். தடுப்புகளை தாண்டி போராட்டக்காரர்கள் செல்ல முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.