அமெரிக்காவின் 25 % வரி விதிப்பு, இந்தியாவின் நிலை, பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் கருத்து.!

அமெரிக்கா - இந்தியா

அமெரிக்காவின் 25 % வரி விதிப்பு, இந்தியாவின் நிலை, பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் கருத்து.!

சென்னை: அமெரிக்கா அதிபர் டிரம்ப்-ன் 25 சதவிகித வரி விதிப்பு அறிவிப்பு மூலமாக ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த அறிவிப்புக்கு ஒரு தந்திரம் இருப்பதாக கூறிய அவர், ஆகஸ்ட் 2ஆம் தேதி வரி விதிப்பு அமலுக்கு வந்தால் திருப்பூர் டெக்ஸ்டைல், கிரானைட் மற்றும் தோள் பொருட்கள் ஏற்றுமதி பாதிப்பை சந்திக்கும் என்று கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு 25 சதவிகித இறக்குமதி வரியை விதிப்பதாக அறிவித்தார். இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை 5வது கட்டம் வரை முடிவடைந்துள்ள நிலையில், திடீரென டிரம்ப் வரியை விதிப்பதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வரி விதிப்பு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான டிரம்ப், இந்தியா நமது நல்ல நண்பன். கடந்த சில ஆண்டுகளாக நாம் அவர்களுடன் வர்த்தகம் செய்து வருகிறோம். சர்வதேச அளவில் இந்தியா தான் அமெரிக்கா பொருட்களுக்கு அதிக வரியை விதித்து வருகிறது. ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் ராணுவ பொருட்களை இந்தியா வாங்கி வருகிறது. ரஷ்யா, சீனாவிடம் இருந்து எரிபொருட்களையும் கொள்முதல் செய்து வருகிறது.

உக்ரைனில் பொதுமக்களை ரஷ்யா கொன்று குவிப்பதை அனைவரும் எதிர்த்து வரும் நிலையில், இந்தியா ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்து வருகிறது என்று கூறியுள்ளார். அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு காரணமாக இந்தியாவில் பல்வேறு துறைகளிலும் சிக்கல் உருவாகக் கூடும். இந்தியாவில் இருந்து மருந்துகள், எலக்ட்ரானிக்ஸ், நகைகள், ஆடைகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

அதில் மருந்துகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமெரிக்கா வரி விலக்கு அளித்திருக்கிறது. இதுகுறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் பேசுகையில், இது இன்னும் உறுதியாகவில்லை. ஆனால் டிரம்ப் திடீரென அறிவித்திருக்கிறார். இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவிகிதம் வரியும், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதற்காக அபராதமும் விதிப்பேன் என்று கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் ஒரு இழுபறி நீடித்துள்ளது. விவசாயப் பொருட்களான கோதுமை, பருப்பு வகைகள் எல்லாம் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்கிறோம் என்று அமெரிக்கா கூறி வருகிறது. ஆனால் இந்தியா அதற்கு அனுமதி அளிக்க மறுத்து வருகிறது.

விவசாயப் பொருட்களை இறக்குமதி செய்தால், இங்குள்ள விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். அமெரிக்காவிடம் இருந்து இறக்குமதி செய்தால், விவசாயப் பொருட்களின் விலை குறையும். நம் நாட்டிலேயே கோதுமை, பருப்பு அதிகமாக உள்ளது. அதேபோல் ரிலையன்ஸ் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வாங்கி ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவுடன் பேச்சுவார்த்தை இழுத்துக் கொண்டே போகிறது.

இதனால் அமெரிக்காவின் இந்த செயலை ஒரு தந்திரமாகவே பார்க்கிறேன். ஆகஸ்ட் 2ஆம் தேதி வரி வதிப்பு அமலுக்கு வந்து, இந்தியாவில் இருந்து பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டால் மட்டுமே கவலைப்பட வேண்டும். ஒருவேளை வரி விதிப்பு அமலுக்கு வந்தால், இந்தியாவில் இருந்து இன்ஜினியரிங் குட்ஸ், திருப்பூர் ஜவுளித்துறை, கிரானைட், ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதியில் இருந்து செல்லும் தோள் பொருட்கள் பாதிப்பை சந்திக்கும் என்று தெரிவித்துள்ளார்.