ஸ்ரீ பெட்டதம்மா தேவி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
கிருஷ்ணகிரி
ஓசூர் அருகே 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பெட்டதம்மா தேவி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் : பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் வழிபட்டு அருள் பெற்றனர்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள கலுகொண்டப்பள்ளி கிராமத்தில் மலை மீது சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பெட்டதம்மா தேவி திருகோயில் உள்ளது. இந்த கோயிலில் ஸ்ரீ பெட்டதம்மா, ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர், ஸ்ரீ சின்னம்மா ஆகிய தெய்வங்கள் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.
இந்த கோயிலில் டிவிஎஸ் தொழிற்சாலை நிர்வாகம், கோவில் கமிட்டி நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. அதனைத் தொடர்ந்து இன்று ஜீவனோத்தாரணம் அஷ்டபந்தனம், மகா கும்பாபிஷேகம், பிரபஞ்ச சாந்தி பெருவிழா மற்றும் மாவிளக்கு தீபாராதனை நடைபெற்றது.


முன்னதாக இந்த கோயிலில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 12 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கியது அதனைத் தொடர்ந்து முதற்கால மற்றும் இரண்டாம் கால மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
மேலும் இன்று அதிகாலை முதலே வேத விற்பனர்கள் மந்திரங்கள் ஓத நான்காம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து வேத விற்பனர்கள் கும்ப கலசங்களை தலை மேல் சுமந்தப்படி கோயிலை சுற்றி வந்தனர் அப்போது பக்தர்களும் கோயிலை சுற்றி வலம் வந்தனர். அதனைத்தொடர்ந்து கோயிலில் ஸ்ரீ பெட்டதம்மா சுவாமிக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா மங்களாரத்தி காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் கமிட்டி நிர்வாகிகள் மிகச் சீரும் சிறப்புமாக செய்திருந்தனர். கும்பாபிஷேகத்திற்கு வந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் பேலகொண்டபள்ளி, கலுகொண்டபள்ளி, மதகொண்டபள்ளி, எஸ். முதுகானப்பள்ளி, உளி வீரணப்பள்ளி, நாகொண்டபள்ளி ஊராட்சிகளுக்கு சேர்ந்த ஊர் பொதுமக்கள், சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து பெட்டதம்மன் அருள் பெற்றனர்.
நடைபெற்ற ஸ்ரீ பெத்ததம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் சிறப்பு விருந்தினராக பெங்களூரை சேர்ந்த வேணுகோபால், ஓசூர் மாநகராட்சி மண்டல குழு தலைவர் ஜே பி என்கின்ற ஜெய் பிரகாஷ், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், பிஜேபி மாவட்ட தலைவர் நாராயணன்,மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு ஶ்ரீ பெட்டதம்மன் தேவியை வழிபட்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
