அண்ணாமலையை பாஜகவில் ஒதுக்கி வச்சிருக்காங்க! அவருக்கு ஒன்னுமே தெரியாது! பாஜக முதல்வர் பட்னவீஸ் தாக்கு.!
மும்பை
மும்பை: தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதுவுமே தெரியாது, சரியாக பேசத் தெரியாமல் எதிராளி ஸ்கோர் செய்ய வைப்பதால் அவரை பாஜக ஒதுக்கி வைத்துள்ளது என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஒரு மராத்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அண்ணாமலை ஒவ்வொரு முறையும் பேசும் போதெல்லாம் அது எதிர்க்கட்சியினருக்கே சாதகமாகிவிடுவதால் அவரை பாஜகவில் இருந்து புறக்கணித்துள்ளனர்.
அண்ணாமலையின் இந்தி மிகவும் மோசமாக இருக்கும். அவருக்கு எதுவுமே தெரியாது. எனவே அவர் மும்பை குறித்து பேசுவதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என விமர்சித்துள்ளார்.
தேவேந்திர பட்னவீஸ் மகாராஷ்டிர பாஜக நிர்வாகி. மேலும் தற்போது மகாராஷ்டிராவின் முதல்வராகவும் உள்ளார். இந்த நிலையில் இவர், பாஜகவை சேர்ந்த அண்ணாமலையை விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்கள் மண் குறித்து அண்ணாமலை பேசியதும் சிவசேனா, பாஜக உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இணைந்து அண்ணாமலைக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
ஜனவரி 15ஆம் தேதி நடைபெறவுள்ள மும்பை மாநகராட்சித் தேர்தலை முன்னிட்டு, பாஜக தலைவர் அண்ணாமலை தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அவர், "மும்பை மகாராஷ்டிராவின் நகரம் மட்டுமல்ல, அது ஒரு சர்வதேச நகரம்" எனப் பேசியது, அம்மாநிலத்தில் பெரும் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலையின் இந்தக் கருத்துக்கு மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கடும் பதிலடி கொடுத்தார். தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், "தமிழ்நாட்டில் இருந்து இங்கே வந்த உங்களுக்கும் (அண்ணாமலை) இந்த மண்ணுக்கும் என்ன தொடர்பு? அதனால்தான் உங்களை (தமிழரை) பால்தாக்கரே விரட்டி அடித்தார். வட இந்தியர்களுக்கு எதிராக அவதூறுகளை இதுவரை பேசிவிட்டு இப்போது தென்னிந்தியர்களுக்கு எதிராக பேசுவதா?" என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார். தமிழர்களை இழிவுபடுத்தும் விதமான அவரது பேச்சு பரவலான விமர்சனங்களைச் சந்தித்தது.
இதற்கு அண்ணாமலை சவால் விடுக்கும் வகையில் பதில் அளித்தார்: "மும்பைக்கு வந்தால் என் காலை வெட்டுவதாகவும், மேலே Ink அடிப்பதாகவும் மிரட்டலுடன் சிவசேனா பத்திரிகையில் எழுதியிருக்கிறார்கள். நான் மும்பைக்கு வருவேன். முடிந்தால் என் காலை வெட்டிப் பாருங்கள். Ink அடித்துப் பாருங்கள். மிரட்டல், உருட்டலுக்கு நான் பயப்படமாட்டேன். மும்பை உலகத்தின் தலைநகர் என்று சொல்லும் போது அது மராட்டியர்களால் கட்டிய நகரம் இல்லை என்று ஆகிவிடுமா?" என்று அவர் தெரிவித்தார்.
ராஜ் தாக்கரேவின் கருத்துகள் குறித்துப் பேசிய உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே, அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தார். ஜனவரி 12 அன்று அவர், "அண்ணாமலை பாஜகவில் கிட்டத்தட்ட ஒன்றுமில்லாதவர். அவரால் தனது டெபாசிட்டைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் தேர்தலில் தோற்றவர். ஆனால் அடுத்த பிரதமரைப் போல பேசுகிறார். தமிழ்நாடும் மகாராஷ்டிராவும் முற்றிலும் மாறுபட்ட இரண்டு பகுதிகள்... மும்பை என்றால் என்ன என்று அண்ணாமலை வந்து எங்களுக்குச் சொல்லப் போகிறாரா? அண்ணாமலையும் பாஜகவும் மகாராஷ்டிராவை அவமதித்துள்ளனர், இதை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
