2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கையை தயாரிக்க அதிமுக சார்பில் 10 பேர் கொண்ட குழு. !

அதிமுக

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கையை தயாரிக்க அதிமுக சார்பில் 10 பேர் கொண்ட குழு. !

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கையை தயாரிக்க 10 பேர் கொண்ட குழுவை அறிவித்திருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.

நத்தம் விஸ்வநாதன், பொன்னையன் உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம் பெற்றிருக்கும் நிலையில் இன்று அந்த குழுவின் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதற்கிடையே மகளிர் உரிமைத் தொகையை 3000 ஆக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை தீவிரமாக்கி வருகின்றன. இந்த முறை நான்கு கட்சிகள் இடையே நேரடி போட்டி உருவாகும் சூழல் உருவாகியுள்ளது.

இதனால் கூட்டணி பேச்சுவார்த்தைகள், வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு, தேர்தல் அறிக்கை தயார் செய்தல் போன்ற பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே திமுக, கனிமொழி தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை அமைத்து தேர்தல் அறிக்கை தயாரிப்பை தொடங்கியுள்ளது.

2026 தமிழகத் தேர்தல்

அதேபோல் அதிமுகவிலும் இந்த பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், மாநில பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், அர்ஜூன் ராம் மேக்வால், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் சந்தித்து கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இது, அதிமுக-பாஜக கூட்டணி தொடர்ந்து நீடிக்கும் என்பதற்கான அடையாளமாக கருதப்பட்டது. இந்த சூழலில், அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட தனி குழுவை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதிமுக தேர்தல் அறிக்கை

இந்த குழுவில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், சி.வி.சண்முகம், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ்.மணியன், உதயகுமார் மற்றும் வைகை செல்வன் ஆகியோர் இந்தக்குழுவில் உள்ளனர்.

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களின் கருத்துகளை நேரடியாக இந்த குழு கேட்கும். மேலும், பல்வேறு சமூகத்தினர், தொழில்நுட்ப வல்லுநர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைவரின் தேவைகளையும் அறிந்து அதைப் தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்வதே இலக்கு எனக் கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி

சுற்றுப்பயண தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக, இந்த தேர்தல் அறிக்கையை சாதாரண வாக்குறுதி பட்டியலாக அல்லாமல், மக்களின் தேவைகளை நேரடியாக பிரதிபலிக்கும் ஆவணமாக உருவாக்க முயற்சி செய்கிறது. குறிப்பாக வேலை வாய்ப்பு, கல்வி, சுகாதாரம், விவசாயம், சட்டம் மற்றும் ஒழுங்கு போன்ற துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.