தமிழக அரசியலில் திடீர் திருப்பங்கள், பல தலைவர்கள் குழப்பத்தில், சில தலைவர்கள் மு.க.ஸ்டாலினுடன் இணக்கத்தில். !
தமிழக அரசியல் களம்

தமிழ்நாடு அரசியலில் நேற்று முதல்நாள் மாலை முதல் நேற்று மாலை வரை 24 மணி நேரத்தில் ஏகப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.
தமிழக அரசியலையே உலுக்கும் விதமாக அடுத்தடுத்து முக்கியமான சம்பவங்கள் நடந்துள்ளன. அவை என்னென்ன சம்பவங்கள் என்று இங்கே பார்க்கலாம்.
சம்பவம் 1 - பாஜகவில் கேடி ராகவன்
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் இரண்டாவது கட்ட நிர்வாகிகள் பட்டியல் நேற்று முதல்நாள் மாலை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த நியமனங்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஒப்புதல் அளித்ததாக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். தமிழக பாஜக தலைவராகப் பதவி வகிக்கும் நயினார் நாகேந்திரன், கட்சி ரீதியாக சில முக்கிய நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளார். பொதுவாக, புதிய தலைவர்கள் தங்கள் நிர்வாக வசதிக்கேற்ப கட்சி நிர்வாகிகளை மாற்றுவது வழக்கம். அந்த வகையில், நயினார் நாகேந்திரனும் அண்ணாமலை நியமித்த நிர்வாகிகளை மாற்ற திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் இரண்டாவது கட்ட நிர்வாகிகள் பட்டியல் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த நியமனங்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஒப்புதல் அளித்ததாக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இதில் நடிகை குஷ்பு மாநில துணைத் தலைவராகவும், சூர்யா இளைஞரணி தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் எஸ்.ஆர். சேகர் மாநில பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கே.டி. ராகவன் மாநில பிரிவு அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் தமிழக பாஜகவில் மீண்டும் கே டி ராகவனுக்கு பதவி கிடைத்துள்ளது. 3 வருடங்களுக்கு முன் பாலியல் வீடியோ கால் புகாரின் பெயரில் இவரின் பதவி பறிக்கப்பட்டது. அண்ணாமலை இருந்தவரை இவர் ஓரம்கட்டப்பட்டு இருந்தார். அவருக்கு பதவி எதுவும் கிடைக்கவில்லை. அண்ணாமலைக்கும் இவருக்கும் மோதல் என்றும் கூட கூறப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில் அண்ணாமலை ஓரம்கட்டப்பட்ட நிலையில், கே டி ராகவனுக்கு பதவி கிடைத்துள்ளது.
அதேபோல் அண்ணாமலைக்கு போட்டியாக கருதப்பட்ட வினோஜ். பி. செல்வம் வகித்து வந்த மாநில செயலாளர் பதவியில் மீண்டும் தொடர்ந்து பணியாற்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கு அண்ணாமலைக்கு எதிராக இருந்த பல நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அண்ணாமலை இருந்த காலத்தில் குஷ்புவும் கூட மாநில பதவிகளில் பெரிதாக பொறுப்புகளை பெறாமல் ஒதுக்கி வைக்கப்பட்டார். இப்படிப்பட்ட நிலையில்தான் நயினார் இவர்களுக்கு தேடி தேடி பதவி கொடுத்துள்ளார்.
சம்பவம் 2 - ஓ பன்னீர்செல்வம் முடிவு
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓ.பன்னீர்செல்வம் அணி தங்களது அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. தலைமைக் கழக நிர்வாகிகளுடனான கூட்டத்திற்கு பிறகு ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார். தற்போது எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தமிழ்நாடு வந்தபோது, அவரைச் சந்திக்க ஓ. பன்னீர்செல்வம் அனுமதி கேட்டிருந்தார். ஆனால், பிரதமரைச் சந்திக்க அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, பல வகையான யூகங்கள் கிளம்பின. இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓ.பன்னீர்செல்வம் அணி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் நேற்று காலையில் முதல்வர் ஸ்டாலினை (O Panneerselvam Stalin meets) சந்தித்து பேசினார். காலையில் நடைப்பயிற்சி சென்ற போது முதல்வர் ஸ்டாலினை ஓ பன்னீர்செல்வம் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்துள்ளார். இதையடுத்து ஆழ்வார்பேட்டையில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் இல்லத்திற்கு நேரடியாகச் சென்றார் ஓபிஎஸ். அவரை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாசலுக்கே வந்து வரவேற்றார். ஸ்டாலின் ஓபிஎஸ் இடையேயான சந்திப்பு சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக நடந்தது.
முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் சில முக்கிய கருத்துகளை தெரிவித்தார். கூட்டணியில் இருந்து வெளியேறியதாக அறிவித்த பிறகு பாஜக தரப்பு பேசினார்களா என்ற கேள்வி, கேட்டதற்கு "இல்லை" என்று ஒரே வார்த்தையில் மட்டும் ஓபிஎஸ் பதிலளித்தார்.
ஓ பன்னீர்செல்வம் முடிவால் அதிமுக கூட்டணிக்கு தென் மண்டலத்தில் வர வேண்டிய முக்குலத்தோர் வாக்குகள் கடுமையாக சரியும். அதேபோல் டெல்டா மாவட்டங்களிலும் முக்குலத்தோர் கடுமையாக அதிர்ச்சி அடையும் வாய்ப்புகள் உள்ளன.
சம்பவம் 3 - பிரேமலதா மீட்டிங்
சென்னை தலைமைச் செயலகத்திற்கு நேற்று காலை செல்வதற்கு முன்பு, முதல்வர் மு.க. ஸ்டாலினின் இல்லத்திற்கு வருகை தந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில், பிரேமலதா விஜயகாந்த் முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும், சமீபத்தில் மறைந்த தி.மு.க.வின் மூத்த தலைவர் மு.க. முத்துவின் மறைவுக்கும் முதல்வர் ஸ்டாலினிடம் பிரேமலதா விஜயகாந்த் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து ஆறுதல் கூறினார்.
இந்தச் சந்திப்பின்போது, தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு மற்றும் தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் ஆகியோரும் உடனிருந்தனர். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் குறித்த கூட்டணி அமைப்பது குறித்து தேமுதிக இதுவரை எந்த விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.
கடந்த தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து தேமுதிக போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
வரும் ஜனவரி மாதம் நடைபெறும் கட்சி மாநாட்டில் கூட்டணி குறித்தான முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தது இருந்தார்.
இப்படி பல சம்பவங்கள் தற்போதைய அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.