அஜிதாவுக்கு பதவி கொடுக்கறதாதான் விஜய் சொன்னாரு! ஆனால் பிரச்சனையே வேறு! பெண் நிர்வாகி பேட்டி.!

த வெ க

அஜிதாவுக்கு பதவி கொடுக்கறதாதான் விஜய் சொன்னாரு! ஆனால் பிரச்சனையே வேறு! பெண் நிர்வாகி பேட்டி.!

சென்னை: தூத்துக்குடி அஜிதா ஆக்னலுக்கு விஜய் பதவி கொடுக்காமலாம் இல்லை, அவங்க பிரச்சினை செய்யுறதுக்கு காரணமே வேறு என தவெகவில் தூத்துக்குடி மாவட்ட செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட அனுசியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அனுசுயா கூறியிருப்பதாவது: ஒரு அரசியல் கட்சித் தலைவர் என்று கூட பார்க்காமல் எங்கள் தலைவர் விஜய் காரை மடக்கினார். அஜிதாவிடம் தூத்துக்குடி மத்தி, ஒட்டப்பிடாரத்தை பார்த்துக்க சொன்னாங்க. ஆனால் இவங்க தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் 6 தொகுதிகளையும் கேட்டாங்க. இதுதான் குளறுபடிக்கு காரணம் எனஅவர் தெரிவித்துள்ளார்.

தவெக சார்பில் 120 மாவட்டச் செயலாளர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தனர். எனினும் சில தொகுதிகளுக்கான மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்படாமல் இருந்தது.

அந்த பட்டியலில் தூத்துக்குடி மாவட்டமும் உள்ளது. அங்கு 6 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில் மீதமுள்ள மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கவுள்ளதை அறிந்த அஜிதாவும் அவரு ஆதரவாளர்களும், பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மேலும் தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளராக சாமுவல் என்பவர் நியமிக்கப்படவுள்ளார் என செய்தி வெளியானது. இதை எதிர்த்த அஜிதா, "கட்சியில் நீண்ட காலமாக உழைத்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை. தொகுதியில் செல்வாக்கே இல்லாத ஒருவருக்கு பதவி வழங்கும் அநியாயம்" என அதிருப்தியை அஜிதா தெரிவித்தார்.

விஜய்யின் நிகழ்ச்சிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஷபியுல்லா, அஜிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் அஜிதா தனது போராட்டத்தை கைவிடவில்லை.

இந்த நிலையில் நிர்வாகிகள் நியமனத்திற்காக பனையூர் கட்சி அலுவலகத்திற்கு விஜய் வந்திருந்த போது அவரது காரை அஜிதாவும் அவரது ஆதரவாளர்களும் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் அவர்களை பவுன்சர்கள் அப்புறப்படுத்தினர்.

இதையடுத்து நிர்வாகிகள் பட்டியல் வெளியான நிலையில் அதில் அஜிதாவின் பெயர் இல்லை. சாமுவேலின் பெயர் இருந்ததால் கோபமடைந்த அஜிதாவும் ஆதரவாளர்களும் தவெக அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். அவர்களை நிர்மல் குமார் சமாதானம் செய்ய முயன்று முடியவில்லை. இந்த நிலையில் அஜிதா, திமுகவின் கைக்கூலி என புதிதாக நியமிக்கப்பட்ட சாமுவேல் பேட்டி அளித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.