கோவையில் ரூ.3.5 கோடி மதிப்புள்ள பூங்கா நிலம் கபளிகரம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை .!
கோவை வடக்கு
ரூ.3.5 கோடி மதிப்புள்ள பூங்கா நிலம் கபளிகரம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை .!
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்குட்பட்ட சரவணம்பட்டி மீனாட்சி நகரில், மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.3.5 கோடி மதிப்புள்ள பொது ஒதுக்கீட்டு பூங்கா நிலத்தில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்றாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவை சரவணம்பட்டி பகுதியில் கடந்த 1993 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மீனாட்சி நகர் மனைப்பிரிவில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 50 சென்ட் நிலம் பூங்காவாக ஒதுக்கப்பட்டது.

அந்த நிலம் 1993 ஆம் ஆண்டு தானப்பத்திரம் மூலம் சரவணம்பட்டி பேரூராட்சிக்கு ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த பூங்கா நிலத்தில் சுமார் 13 சென்ட் நிலத்தை சிவஞானம் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து மதிற்சுவர் கட்டி ஆக்கிரமித்துள்ளார் .
இதுகுறித்து 2021ஆம் ஆண்டு கோவை மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் அனுப்பியிருந்தார். ஆனால், அந்த நோட்டீஸை எதிர்த்து சிவஞானம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், 19.12.2025 அன்று வழக்கை தள்ளுபடி செய்து, ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு வழங்கியுள்ளது.



உயர்நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆக்கிரமிப்பு அகற்ற பொக்லைன் இயந்திரத்துடன் தயார் நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
திடீரென நடவடிக்கையை நிறுத்த உத்தரவு வந்ததாக சமூக ஆர்வலரும் , தமிழ்நாடு ரிசர்வ் சைட் பாதுகாப்பு சங்க செயலாளருமான எஸ்.பி. தியாகராஜன் இது குறித்து குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் தியாகராஜன் கூறியது :=
திறந்த வெளி ஒதுக்கீட்டு நிலங்கள் எந்த விதத்திலும் வேறு பயன்பாட்டிற்கு மாற்றக் கூடாது என்றும், ஆக்கிரமிப்பு ஏற்பட்டால் உடனடியாக இடித்து மீட்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் பலமுறை தெளிவாக உத்தரவிட்டுள்ளது.
ஆனால் இங்கு அந்த உத்தரவு மீறப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவிட்டும் இடத்தை ஆக்கிரமிப்பு செய்த சிவஞானம் வழக்கு தொடர்ந்த போது அதனை தள்ளுபடி செய்து நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது என்றார்.
மேலும் 13 சென்ட் இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் விரைவில் மதில் சுவரை இடித்து கையகப்படுத்த வேண்டும் . ஆக்கிரமிப்பாளர் கையகப்படுத்தி வைத்துள்ள மீதமுள்ள 37 சென்ட் இடத்தையும் மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் வேலி போட்டு பாதுகாத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.
இது தொடர்பாக, கோவை மாநகராட்சி ஆணையருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற தீர்ப்பை மதித்து உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றி, பூங்கா நிலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
