அனுமந்தபுரம் நடுகல் கல்வெட்டு கண்டுபிடிப்பு.!

கிருஷ்ணகிரி

அனுமந்தபுரம் நடுகல் கல்வெட்டு கண்டுபிடிப்பு.!

அனுமந்தபுரம் நடுகல் கல்வெட்டு

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் வரலாற்று ஆய்வாளர் சதானந்த கிருஷ்ணகுமார் பகிர்ந்த முகநூல் பதிவின் மூலம் அறிந்த வரலாற்று செய்தி இது.

சென்னை அரசு அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள இந்த நடுகல் கல்வெட்டு கிருஷ்ணகிரி மாவட்டம், அனுமந்தபுரம் என்னும் ஊரிலிருந்து கொண்டு வரப்பட்டதாகும்.

பல்லவ மன்னன் முதலாம் ஈச்சுவரவர்மன் காலத்தில் இரண்டு இனக்குழுக்களிடையே வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற பூசல் நிகழ்வைப் பதிவு செய்கிறது. 

ஈச்சுவரவர்மனின் பதினேழாவது ஆட்சியாண்டில் கட்கணையூரின் மீது பகைவர் படை வந்தபோது அப்பகுதியின் இனக்குழுத் தலைவராக இருந்த காடந்தைகள் என்பவரின் படையைச் சேர்ந்த இளம்விரன்(சேவகன்) பூதூர் சாத்தன் என்பவன் மாண்டச் செய்தி ஒரு கல்வெட்டில் பதிவாகியுள்ளது. 

அதேயாண்டில் பதிவான மற்றொரு கல்வெட்டில் இப்பகுதியின் இனக்குழுத் தலைவரான காடந்தைகள் என்பவரின் படை பகைநாட்டின் மீது படையெடுத்து சென்றபோது கட்டிக் கணணி)க்கர் என்பவர் மாண்டச் செய்தியினைப் பதிவு செய்கிறது. 

வெவ்வேறு நிகழ்வுகளில் மாண்ட இரண்டு வீரர்களின் நினைவாக ஒரே கல்லில் உருவம் பொறித்து கல்வெட்டு எழுதியுள்ள நிகழ்வு அரிதான ஒன்றாகும். வீரர்கள் இருவரும் வலக்கையில் குறுவாளுடன், இடைக்கையில் வில்லம்புக் கொண்டிருப்பது போல சிற்பக் காட்சியுள்ளது. 

மேலும் நடுகல் சிற்பத்தில் கெண்டி மற்றும் நடுகல்லிற்கு படையல் இடும் காட்சியும் சிற்பத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டுகளை அழகாக இன்று நாம் நோட்டு புத்தகத்தில் பத்தி பிரித்து வைப்பது போல, கட்டம் கட்டி இரு நிகழ்வுகளையும் கல்லெழுத்தில் பொறித்துள்ளனர்.

கல்வெட்டு வாசகம்

கல்வெட்டு 1

கோவிசைய ஈச்சுவர பரும

2. ற்கு யாண்டு பதினேழாவத

3.ன் கட்கணைஊர் மேற்படை வ

4.ந்த ஞான்று பட்டான் காடந்தை

5.கள் சேவகன் பூதூர் சாத்தன்

கல்வெட்டு 2:

1. கோவிசைய ஈச்சுவர பருமற்கி

2. யாண்டு பதினேழாவதன்

3.காடந்தைகள் செக்கன் வர்

4. மேற்படை சென்ற ஞான்று பட்டான்

5. கட்டி கணக்கார்

இந்த கல்வெட்டின் மூலம் முன்னோர் வரலாற்றை, நிகழ்வுகளின் சாராம்சத்தை  அறிவதோடு கிருஷ்ணகிரி மாவட்டம் தொன்மைக்கு சான்றாக விளங்வதற்கு சாட்சியாகவும் உள்ளது என்று கிருஷ்ணகிரி அருங்காட்சியக முன்னாள் காப்பாட்சியர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

மாருதி மனோ