கலங்கி நின்ற கோவில்பட்டி பில் கலெக்டர், ஒரே நாளில் மாறிய தலையெழுத்து. !

தூத்துக்குடி

கலங்கி நின்ற கோவில்பட்டி பில் கலெக்டர், ஒரே நாளில் மாறிய தலையெழுத்து. !

தூத்துக்குடி: அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கி சிக்கிக்கொண்டால், அது அவர்களுக்கு தீராத சிக்கலை ஏற்படுத்தும்.

ஓய்வு பெற்ற பின்னர் கூட சிலருக்கு வழக்கில் தண்டனை கிடைத்துள்ளது. இவ்வளவு சிக்கல் இருந்தும் சில அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதை தொடருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டம் கோவிப்பட்டியில் சொத்து பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த சொத்துக்கு வீட்டு தீர்வை பெயர் மாற்றம் செய்ய 25 ஆயிரம்ரூபாய் லஞ்சம் வாங்கிய புகாரில் பில் கலெக்டர் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.

அரசு ஊழியர்களை யாராவது லஞ்சம் கேட்டால் அவர்களை பற்றி உங்கள் மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளியுங்கள். அப்படி புகார் அளித்தால் அவர்கள் உடனே நடவடிக்கை எடுப்பார்கள். பலரும் இப்போது ஆர்வமுடன் புகார் அளிக்கிறர்கள். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பில் கலெக்டர் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.

கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட ஊரணி தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி காளீஸ்வரி. காளீஸ்வரியின் தந்தை துரை கண்ணன் நாடார் தனது மகள் காளீஸ்வரி பெயருக்கு சொத்தை கடந்த சில வருடங்களுக்கு முன்பு எழுதி தந்துள்ளார். அதன்படி காளீஸ்வரி பெயருக்கு வீட்டு தீர்வை பெயர் மாற்றம் செய்வதற்கு காளீஸ்வரியின் கணவர் செல்வக்குமார் நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு உள்ளார். அங்கிருந்த பில் கலெக்டர் 29 வயதான நவீனா என்பவர் பெயர் மாற்றம் செய்வதற்கு 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

முதல் கட்டமாக பத்தாயிரம் ரூபாய் தர வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வகுமார் தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீசிடம் புகார் அளித்தார் . இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பீட்டர் பால் துரை, இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி, எஸ்.ஐ. தளவாய் மற்றும் சுந்தரவேல், பாண்டி, கோமதி, முத்து, ஷியாம் உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்துக்கு வருகை தந்து மறைந்திருந்து நோட்டமிட்டனர்.

மேலும் செல்வகுமாரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்தனுப்பிய ரசாயன பவுடர் தடவிய 500 ரூபாய் நோட்டுகள் பத்தாயிரத்தை பில் கலெக்டர் நவீனா, நகராட்சி அலுவலகத்தில் உள்ள வருவாய் பிரிவு அறையில் வைத்து செல்வகுமாரிடமிருந்து பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக சுற்றி வளைத்து பிடித்தனர்.