அமித்ஷா வாக்குக்காக பார்க்கிறேன் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு - அண்ணாமலை. !
அதிமுக Vs பாஜக
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அதிமுகவில் சிலர் என்னை திட்டிக்கொண்டு இருக்கிறார்கள். எனது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. நான் வாய்திறந்தால் எல்லாவற்றையும் பேசிவிடுவேன். அமித்ஷா வாக்குக்காக கட்டுப்பட்டு இருக்கிறேன்.
நான் தான் காரணம் என பேசுறாங்க
லட்சுமண ரேகையை தாண்டக்கூடாது. எல்லாம் தானாக நடக்கிறது. அப்படி இருக்கும் போது எல்லாவற்றிற்கும் நான் தான் காரணம் என பேசுகிறார்கள். பசும்பொன்னில் ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஒன்றிணைந்ததற்கு நான் காரணம் இல்லை. யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது" என்றார்.
அப்போது செங்கோட்டையனை நீங்கள் (அண்ணாமலை) சந்தித்ததாக தகவல் வருகிறதே என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, 'கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் போகலாம். காரில் போகலாம். ரயிலில் போகலாம். விமானத்தில் போகும் போது அவர் (செங்கோட்டையன்) வருகிறார்.
2 முறை சந்தித்து இருக்கிறேன்
நான் பார்க்கிறேன். இரண்டுமுறை அவரை சந்தித்து இருக்கிறேன். இரண்டு முறையுமே விமானத்தில்தான் சந்தித்து இருக்கிறேன். வெளியே வரும் போதுதான் பேச வாய்ப்பு கிடைத்தது. பொதுவாகத்தான் பேசினோம்.. அவருடைய அரசியல் வாழ்க்கை அவருடையது. என்னுடைய அரசியல் வாழ்க்கை என்னுடையது" என்றார்.
ஓபிஎஸ் - டிடிவி - செங்கோட்டையன் சந்திப்பு
முன்னதாக நேற்று சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118-வது ஜெயந்தி விழா மற்றும் 63-வது குருபூஜை நடைபெற்றது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு நகரமே விழாக்கோலம் பூண்டது. இதில் பங்கேற்க ஏராளமானவர்கள் திரண்டனர்.
பசும்பொன்னுக்கு வந்து முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். அதேபோல், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், குருபூஜை விழாவில் பங்கேற்க மதுரையில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துடன் நேற்று ஒரே காரில் பசும்பொன் வந்தார்.
சசிகலாவுடனும் சந்திப்பு
பசும்பொன் சென்றதும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுடன் சேர்ந்து மூவரும் ஒன்றாக பங்கேற்று, தேவர் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் தேவர் வாழ்ந்த வீட்டை பார்வையிட்டனர். ஓ. பன்னீர்செல்வத்துடன் செங்கோட்டையன் ஒரே காரில் வந்தது நேற்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக, ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் அங்கு சசிகலாவை சந்தித்தனர். சிறிது நேரம் அவர்கள் மூவரும் பேசிக்கொண்டு இருந்தனர். இவர்களின் சந்திப்பு நேற்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த சந்திப்புக்கு நான் காரணம் என சிலர் பேசுவதாகவும் அது தானாக நடந்தது என்றும் அண்ணாமலை பேசியுள்ளார்.
