ஆட்சியில் பங்கு! சட்டசபையில் 25 பாமக எம்எல்ஏக்கள்! சூளுரைத்த காந்திமதி .!
பா.ம.க.
சேலம்: 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் 25 எம்எல்ஏக்கள் சட்டசபைக்குள் செல்வார்கள் என்று பாமக செயல்தலைவர் ஸ்ரீகாந்திமதி தெரிவித்தார்.
மேலும் ஆட்சியிலும் பங்கு பெறுவோம் என தெரிவித்திருந்தார்.
சேலத்தில் ராமதாஸ் தலைமையிலான பாமக பொதுக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செயல்தலைவர் ஸ்ரீகாந்திமதி பேசுகையில், கலப்படம் இல்லாத தங்கங்கள் நீங்கள்தான் (தொண்டர்கள்).
ராமதாஸின் ஆட்டத்தை இனிமேதான் பார்க்க போறீங்க! 2026-ஆம் ஆண்டுக்கான தேர்தல் வருது. இன்னும் 5 மாசம்தான் இருக்கு. இந்த தேர்தலில் பாமக ஒரு சாதாரண கட்சியாக இருக்க கூடாது. ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக மாற வேண்டும்.
நமக்கென ஒரு மரியாதை வேண்டும். நம் சமூகத்தின் நோக்கங்களும் எண்ணங்களும் நிறைவேற வேண்டும் என்றால் சும்மா வெளியே இருந்து ஆதரவு தருவது போதாது. ஆட்சி மாற்றம் வேண்டும். அந்த ஆட்சியில் நமக்கு பங்கு வேண்டும்.
ராமதாஸ் வியூகம் வகுத்துவிட்டார். யாருடன் கூட்டணி என்பதையும் யாருக்கெல்லாம் சீட் என்பதையும் முடிவு செய்துவிட்டார். எப்படி ஜெயிக்க வேண்டும் என்பதும் ராமதாஸுக்கு தெரியும். இனிமேல் குறுக்கே பேச யாருமே கிடையாது. காலை வாரி விடவும் யாரும் கிடையாது.
நான் சொல்வதை எழுதி வச்சிக்கோங்க! வரபோகும் தேர்தலில் குறைந்தது 25 எம்எல்ஏக்களுடன் பாமக சட்டசபைக்குள் நுழையும். நாம் இழந்த அந்த சின்னம் மாம்பழம் மீண்டும் நம் கைக்கு வரும்.
தம்பி அன்புமணிக்கு அதிகாரம் வேண்டும் என்றால் அவர் தனியாக கட்சி ஆரம்பித்துக் கொள்ளட்டும். இது ராமதாஸ் கட்டிய கோட்டை. இங்கு அவர்தான் ராஜா! நீங்கள் (தொண்டர்கள்) எல்லாரும்தான் மந்திரிகள். நான் ராமதாஸின் பொண்ணு மட்டுமில்லை, நான் பாமக தொண்டன். ராமதாஸ் கண்களில் ஆனந்த கண்ணீரை வரவழைக்கத் தயாரா?
துரோகத்தை வீழ்த்துவோம், அய்யாவின் கரத்தை வலுப்படுத்துவோம். கவுரவத் தலைவர் ஜி.கே.மணியையும் சேலம் அருளையும் திமுகவின் கைக்கூலிகள் என சொல்கிறார்கள். அவர்கள் யாரென்று பார்த்தால் ஆர்எஸ்எஸ்ஸின் கைக்கூலிகள்.
பேசுவோர் பேசட்டும். தூற்றுவோர் தூற்றட்டும், நம்முடன் ஐயா இருக்கிறார் என காந்திமதி தெரிவித்தார். காந்திமதி பேச பேச அவருக்கு விசிலும் கைதட்டல்களும் எழுப்பப்பட்டது.
காந்திமதி பேசியதில் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் ஆர்எஸ்எஸ்ஸின் கைக்கூலிக் என சொல்லப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்தது என்றாலும் ஆட்சியில் பங்கு, 25 எம்எல்ஏக்களுடன் சட்டசபைக்குள் நுழைவோம் என அவர் கூறியிருப்பதுதான் முக்கியத்துவம் வாய்ந்தது.
அதாவது பாமக ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சிதான். இது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல! மேலும் தற்போது வரை கட்சியும், மாம்பழம் எனும் சின்னமும் அன்புமணி தரப்புக்கு சொந்தமானது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதை எதிர்த்து ராமதாஸ் தரப்பு கோர்ட்டுக்கு போயுள்ளனர்.
அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்குத்தான் தேர்தல் ஆணையம் தலையிட்டு பிரச்சினையை தீர்க்கும். பதிவு செய்யப்பட்ட கட்சியான பாமக பிரச்சினைக்குள் தேர்தல் ஆணையம் நுழைந்தால் இப்படி ஏராளமான பதிவு செய்யப்பட்ட கட்சிகள் இருக்கின்றன. அதற்கெல்லாம் தேர்தல் ஆணையம் நுழைய தொடங்கினால் அவர்களது பணிகளை செய்வதில் தொய்வு ஏற்படும். இது ஒன்று!
இன்னொன்று! கட்சியும், சின்னமும் ராமதாஸிடம் இருந்த போதே பாமகவுக்கு அதிகபடியான சீட்டுகள் கொடுத்தும் சரி, தனித்து போட்டியிடும் சரி, பாதிக்கு பாதி கூட வென்றதில்லை. அப்படியிருக்கும் 25 எம்எல்ஏக்கள் என்றால் 25 தொகுதிகள் அல்லது அதற்கு மேற்பட்ட தொகுதிகளை பெற்று தோல்விகள் போக 25 தொகுதிகள் என்ற அர்த்தமும் வரும். இது போன்ற வெற்றி தற்போதைய சூழலுக்கு அதுவும் மாம்பழம் இல்லாமல் சாத்தியமில்லை என்கிறார்கள்.
ஆட்சியில் பங்கு என்பதை திமுக எப்போதுமே ஊக்குவிக்காது, ஒரு வேளை அதிமுக கூட்டணிக்கு என்றால் அங்கு அன்புமணி தலைமையிலான பாமக இருக்கும். அப்போது இவர்களுக்கு 25 சீட் கொடுத்தால் அன்புமணி தரப்புக்கு எத்தனை கொடுப்பது, மற்ற கட்சிகளான பாஜக உள்ளிட்டவைகளுக்கு எத்தனை கொடுப்பது என்ற பிரச்சினை எழும். மேலும் ஆட்சியில் பங்கு என்பதை அதிமுகவும் ஊக்குவித்ததே இல்லை.
எனவே ராமதாஸ் தலைமையிலான பாமக யாருடன் கூட்டணி வைக்க போகிறார், அவர்கள் கேட்டது போல் இத்தனை சீட்டுகள் கிடைக்குமா, அப்படியே கிடைத்தாலும் இத்தனை சீட்டுகளிலும் வெல்ல முடியுமா என்பதெல்லாம் கேள்விகளாக உள்ளன.
