யார் அந்த 150 அரசு ஊழியர்கள், காவல் துறைக்கு பறந்த கடிதம், அமலாக்கத் துறை நடவடிக்கை என்ன?

தமிழகம்

யார் அந்த 150 அரசு ஊழியர்கள், காவல் துறைக்கு பறந்த கடிதம், அமலாக்கத் துறை நடவடிக்கை என்ன?

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

தமிழகத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக உள்ள கே.என்.நேருவின் சகோதார் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய ட்ரூ வேல்யூ ஹோம் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் தமிழக நகராட்சிகளில் 2538 பணியிடங்களை நிரப்புவதில் முறைகேடு நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திப்பதாகவும், விசாரணை நடத்துமாறும், காவல்துறைக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதி உள்ளது.

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட 2,538 காலியிடங்களுக்கு, தேர்வு அறிவிக்கப்பட்டது. 1.12 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கு எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இந்தாண்டு ஆகஸ்ட் 6ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் பணி நியமன ஆணை வழங்கினார்.

இந்நிலையில் பணி நியமனம் பெற்ற 2,538 பேரில் 150 பேர் ரூ.25 முதல் ரூ.35 லட்சம் லஞ்சம் கொடுத்து அரசு வேலை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது என அமலாக்கத்துறை சந்தேகிக்கிறது. இது தொடர்பாக மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் குற்றவாளிகளின் பெயர்கள் அடங்கிய ஆதாரங்களுடன் விசாரணை நடத்த கோரி 232 பக்க கடிதம் ஒன்றை தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை அனுப்பி வைத்துள்ளது.

அப்படி பார்க்கும் போது, நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட இந்த ஆள்தேர்வின் மூலம் மூலம் 2538 அதிகாரிகள், பொறியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், இதில் 150 பணியிடங்களுக்கு லஞ்சம் கைமாறியதாகவும் புகார் எழுந்துள்ளது. 150 வேலைகளுக்கு, ஒவ்வொரு பணிக்கும் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் கைமாறியதாகவும் அமலாக்கத்துறை சந்தேகிக்கிறது. மேலும் லஞ்சமாக வசூலிக்கப்பட்ட பணம் ஹவாலா முறையில் பல இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதில் பல முக்கிய அரசியல்வாதிகளும், உயரதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது.

இதற்கு மூளையாக செயல்பட்டவர்களின் விவரங்கள், ஊழல் எவ்வாறு செய்யப்பட்டது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய 232 பக்க ஆவணங்களை அமலாக்கத்துறை காவல்துறைக்கு அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி விசாரணை நடத்துமாறு பரிந்துரைத்துள்ள அமலாக்கத்துறை, தேர்வு நடத்திய அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் மீதும் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளதாம்.

232 பக்க ஆவணத்தில், தேர்வு மோசடி நடந்த விதம் மற்றும் யாருக்குச் சாதகமாக செயல்முறை கையாளப்பட்டதோ கூறப்படுகிறதோ, அந்த 150பேரின் விவரங்களையும், இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம் வசூலிக்கப்பட்டுப் பணம் செலுத்தப்பட்டதற்கான ஆதார விவரங்களும் விளக்கமாக உள்ளதாம். இதனிடையே நகராட்சி துறை செயலாளர் டி. கார்த்திகேயனைத் தொடர்பு கொண்ட ஆங்கில ஊடகம் கேட்ட போது, அமலாக்கத்துறையின் கடிதம் குறித்துத் தனக்குத் தெரியாது என்றும், நகராட்சியில் பணியிடங்கள் நிரப்புவதில் எந்த முறைகேடும் இன்றி மிகவும் சரியாக நடந்தது என்றும் தெரிவித்தார்.