ஹெச் ராஜாவின் "கந்தன் மலை" தியேட்டர் கிடைக்காததால் யூடியூபில் ரிலீஸ். !
கந்தன் மலை
சென்னை: பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட கந்தன் மலை படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல் யூடியூபில் ரிலீஸ் ஆகி இருக்கிறது.
ஹெச் ராஜா பேசுவதால் மட்டுமல்ல.. அவருடைய படம் கூட மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு அதிகமாகவே கன்டென்ட் கொடுத்திருக்கிறது. சரி இந்த படம் எப்படி இருக்கு என்று பார்க்கலாம்.
வீரக்குமார் இயக்கத்தில் ஹெச் ராஜா முக்கிய கேரக்டரில் நடித்துள்ள கந்தன் மலை படம் தியேட்டர் கிடைக்காத காரணத்தால் தாமரை யூடியூப் சேனலில் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் மொத்த நேரமே ஒரு மணி நேரம் தான். படத்திற்கு சினிமாவை போல இடைவேளையும் விடப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு டிரைலர் வெளியான போதே பெரிய அளவில் சர்ச்சை வெடித்தது.
தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் பிரச்சினையாகவும் பேசும் பொருளாகவும் மாறி இருக்கும் திருப்பரங்குன்றம் மலை தொடர்பான காட்சிகளும், வசனமும் தான் இந்த படத்தின் டிரைலரில் இடம் பெற்றிருந்தது. அதனாலேயே இதை ட்ரோல் செய்ய தொடங்கிவிட்டனர். ஒரு சிலர் ட்ரைலரை பாராட்டி ஹெச் ராஜாவுக்கு வாழ்த்துக்களையும் கூறி இருந்தனர். இந்த படத்தில் திமுகவை விமர்சிக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே பல இடங்களில் வசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது.
ஆரம்பம் முதலே படத்திற்கான கதை பல கிளை கதைகளுடன் பயணிக்க தொடங்கி இருக்கிறது. இதனால் இந்த படத்தில் முக்கியத்துவம் என்ன..? இதில் என்னதான் சொல்ல வருகிறார்கள் என்று எல்லோருக்கும் குழப்பம் வருகிறது. ஒரு சீரியலில் எப்படி ஒரு வாரம் எபிசோடு ஒரு மாதிரி போகும்... இன்னொரு வாரம் எபிசோடு வேற மாதிரி போகுமோ அதே போல இங்கே பல விஷயங்களையும் தொட்டு தொட்டு போயிருக்கின்றனர்.
அதிலும் குறிப்பாக திருப்பரங்குன்றம் விவகாரம், நாடக காதல், சாதி ரீதியான மோதல், ஆணவக் கொலை, காவல்துறையினரின் அதிகாரம் போன்ற பல விஷயங்களுக்கு பஞ்சாயத்தை கூட்டி இருக்கிறார்கள். இதனால் இவங்க என்னதான் கடைசியில் சொல்ல வருகிறார்கள் என்பது குழப்பத்தையே ஏற்படுத்தி இருக்கிறது.
அதிலும் கந்தன் மலை படத்தின் கதை என்னவென்று பார்த்தால், "இந்து மதத்தை பாதுகாக்கும் போராளியாக ஹெச் ராஜாவும், அதனை எதிர்க்கும் ஒரு கூட்டத்திற்க்கு இடையே நடக்கும் மோதல் தான் இந்த படத்தின் கதை" ஒருவேளை நீளம் குறைக்கப்பட்டு ஒரே மணி நேரத்தில் ஒளிபரப்பு செய்வதால் கதையை சரியாக சொல்லாமல் குழப்பி வைத்திருக்கிறார்களா என்ற கேள்விகளும் எழுகிறது.
அதுபோல பின்னணி இசை மற்றும் நடிகர்கள் பேசும் டயலாக் எல்லாம் பார்க்கும்போது ஒரு சீரியலை பார்ப்பது போலவே இருக்கிறது. ஏற்கனவே ட்ரெய்லர் வெளியான சமயத்திலேயே எச் ராஜாவை வைத்து ட்ரோல் செய்ய தொடங்கி விட்டார்கள். அவருக்கு ட்ரோல் செய்வது ஒன்றும் புதியதல்ல. இந்த படத்திலும் அதற்கு தாராளமாக இடம் கொடுத்து இருக்கிறார்.
இந்த படத்தில் தென்னிந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியை நிறுவன தலைவர் திருமாறன் ஜி, வேலூர் இப்ராஹிம் மற்றும் பெரிஸ் மகேந்திரவேல் போன்றோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். படத்தின் கிளைமாக்ஸில் "இந்து மதத்திற்கு விரோதம் செய்தால் அழிந்து போவார்கள்" என்று ரீதியில் கதை சொல்லப்பட்டிருக்கிறது. பொதுவாக பல சமூகத்தை சார்ந்தவர்கள் வாழும் தமிழகத்தில் இதுபோன்ற ஒரு கதையை அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத சூழல்தான் இருக்கிறது.
இந்து மதத்தை சார்ந்தவர்களுக்கு இந்த படம் ஒருவிதத்தில் பிடித்திருந்தாலும், இதில் காட்டப்படும் சில விஷயங்கள் இதெல்லாம் ஓவர் பாஸ் என்று சொல்வது போல இருக்கிறது. அதிலும் ஹெச் ராஜாவே அரிவாளை தூக்கி அனைவருக்கும் ஆச்சரியத்தையும் கொடுத்திருக்கிறார். எவ்வளவு பெரிய ஹீரோ படங்களே ஓவர் ஆக்டிங் மற்றும் சொதப்பலான கதைகளால் மீம்ஸ் கண்டெண்டாக மாறும் நிலையில் இந்த படத்தில் இயக்குனர் அதற்கு தாராளமாக இடம் கொடுத்து இருக்கிறார்.
அது மட்டும் அல்லாமல் சில இடங்களில் ஹெச் ராஜா செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசும் டயலாக்கை கூட வசனமாக வைத்திருக்கிறார்கள். அதில் அவர் காட்டும் எக்ஸ்பிரஷனை பார்க்கும்போது இவருக்கு கூட நடிக்க வருது பாஸ் என்று கமெண்ட்களை பார்க்க முடிகிறது. இதில் வரும் சில பாடல்கள் ஆல்பம் பாடல்கள் போல ஹிட் ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
