அதிக வட்டி தருவதாகக் கூறி கோடியை சம்பாதித்தப் பெண், திடீர் சிக்கலில் சிக்கியது எப்படி?

திருப்பூர்

அதிக வட்டி தருவதாகக் கூறி கோடியை சம்பாதித்தப் பெண், திடீர் சிக்கலில் சிக்கியது எப்படி?

தேனி: தேனியில் சிலர் அதிக வட்டி தருவதாக மக்களை ஏமாற்றி நம்ப வைத்து கோடிக்கணக்கில் மோசடி செய்திருக்கிறார்கள்.

இதேபோல் சிலர் நிதி நிறுவனங்கள் நடத்தி மோசடி செய்து கோடிக்கணக்கில் பணத்தை பறித்துள்ளார்கள். அந்த வரிசையில் தேனி சுக்குவாடன்பட்டியில் செயல்பட்ட தனியார் நிதி நிறுவனத்தினர் முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக கூறி பலரிடம் ரூ.99 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் சரண்யாதேவி என்ற பெண்ணை போலீசார் திருப்பூரில் கைது செய்தனர்.

நிதி நிறுவனங்கள் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு முதலீடு செய்து ஏமாறுவது இன்னமும் பல பகுதிகளில் நடந்து கொண்டு தான்இருக்கிறது. மக்களை நூதன முறையில் ஏமாற்றுவதை பலர் வழக்கமாக வைத்துள்ளார்கள். அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை காண்பிக்கிறார்கள்.. எப்படி என்றால், ஒரு கிராமத்தில் ஒருவர் ஒரு லட்சம் முதலீடு செய்கிறார் என்றால், அவருக்கு வட்டியாக மட்டுமே 10 ஆயிரம் சில மாதங்கள் தருகிறது.

வட்டி கிடைக்கும்

இதை பார்த்து அவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு கூறுவார்.. அவர்கள் அனைவருக்கும் ஆரம்பத்தில் வட்டி தருவார்கள். இதை பார்த்து மொத்த ஊரும் முதலீடு செய்யும். இதேபோல் பக்கத்து ஊரில் உள்ளவர்களும் லட்சங்களில் கோடிகளில் முதலீடு செய்கிறார்கள். லட்சங்களில் முதலீடு செய்தவர்களுக்கு ஆயிரங்களில் வட்டியும், கோடிகளில் முதலீடு செய்வோருக்கு லட்சங்களில் வட்டியும் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு தருகிறார்கள். இப்படியே ஒரு ஆறு மாதம் வரை போகும்.

புதிதாக முதலீடு

புதிதாக முதலீடு செய்வது எந்த அளவிற்கு போகிறதோ அதே அளவிற்கு வட்டியும் கொஞ்ச நாள் தந்தபடி இருப்பார்கள். மாவட்டம் விட்டு மாவட்டம் வரை தகவல் பரவும் அவர்களும் முதலீடு செய்வார்கள். இப்படியே அவர்கள் கோடிகளை குவித்த பின்னர், ஒரு நாள் ஒன்றும் இல்லை என்று கூறி எஸ்கேப் ஆவார்கள்.இதுதான் பல ஊர்களில் நடக்கிறது.

ஒரு கோடி மோசடி

அப்படித்தான் தேனி சுக்குவாடன்பட்டியில் செயல்பட்ட தனியார் நிதி நிறுவனத்தினர் முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக கூறி பலரிடம் ரூ.99 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். அந்த நிதி நிறுவனத்தின் இயக்குநர்களான திருப்பூர் பாளையக்காடு பகுதியை சேர்ந்த அன்பழகன் மனைவி சரண்யாதேவி (38), தேனி அல்லிநகரம் வெங்கலாநகரை சேர்ந்த பாலகுமார் (29), பங்குதாரரான திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே வேலாயுதம்பாளையம் புதூரை சேர்ந்த தனபால் (33), ஊழியர்கள் மணிகண்டன், விஜயன், ராமகிருஷ்ணன், மணிகண்டனின் மனைவி கார்த்திகா உள்பட 8 பேர் மீது கடந்த ஆண்டு ஜூன் மாதம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சரண்யாதேவி கைது

இந்த வழக்கில் மணிகண்டன், தனபால், பாலகுமார் ஆகியோர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய நபரான சரண்யாதேவியை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், திருப்பூரில் சரண்யாதேவி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.