பட்டா மாறுதலுக்கு லஞ்சப் பணத்தை வாங்க வந்த வி ஓ வை மடக்கிப் பிடித்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார். !
குன்றத்தூர்

சென்னை அடுத்த குன்றத்தூர், இரண்டாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் ரவிபாரதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான இடத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக குன்றத்தூர் இரண்டாம் கட்டளை கிராம நிர்வாக அலுவலகத்தில் மனு அளித்து உள்ளார்.
80 ஆயிரம் கேட்ட விஏஓ
இந்நிலையில் இரண்டாம் கட்டளை கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் ராபர்ட் ராஜ் என்பவர், ரவிபாரதியின் மனுவை பரிசீலித்துள்ளார். அப்போது விஏஓ ராபர்ட் ராஜ், பட்டா பெயர் மாற்றம் செய்து கொடுக்க ரூ.80 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை, ரூ.30 ஆயிரம் லஞ்சம் கொடுப்பதாக ரவி பாரதி கூறினாராம். ஆனால் லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத ரவி பாரதி காஞ்சீபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் நடந்த சம்பவங்களை கூறி புகார் அளித்தார்.
30 ஆயிரம் லஞ்சம்
இந்த புகாரின் பேரில் காஞ்சீபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை ரவி பாரதியிடம் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். ரவிபாரதி அலுவலகம் அருகே வந்து வி ஏ ஓ - வை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.
ஆர்வமாக வந்தார்
அப்போது கொழுமனிவாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் ராபர்ட் ராஜ் லஞ்ச பணத்தை வாங்க ஆர்வமுடன் வந்தாராம்.
அதனை கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சரியாக காரில் வைத்து லஞ்ச பணத்தை வாங்கிய போது, மின்னல் வேகத்தில் வந்து ராபர்ட் ராஜை கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குன்றத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.