ரஷ்யாவுடன் இணைந்து என்ன செய்தாலும் கவலையில்லை, இந்தியப் பொருளாதாரம் செத்த பொருளாதாரம் என டிரம்ப் கூறியது சர்ச்சையானது. !
அமெரிக்கா - பாகிஸ்தான் - இந்தியா

வாஷிங்டன்: இந்தியாவின் பொருளாதாரம் செத்த பொருளாதாரம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு அமெரிக்கா வரிக்கு மேல் வரி விதிக்கும் அதே வேளையில் பாகிஸ்தானுக்கு சலுகைக்கு மேல் சலுகை வழங்கியுள்ளது.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவீத வரி மற்றும் கூடுதல் வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
தற்போது இந்திய பொருளாதாரத்தை செத்த பொருளாதாரம் என்று அவர் விமர்சனம் செய்துள்ளார்.
இதுபற்றி டிரம்ப் கூறும்போது,
'இந்தியா ரஷ்யாவுடன் சேர்ந்து என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை. ஆனால் இரண்டு நாடுகளும் தங்களின் மோசமான பொருளாதார நிலையை இணைந்து இன்னும் மோசமாக்கும். அவர்களது பொருளாதாரம் செத்த பொருளாதாரம்.
நாங்கள் இந்தியாவுடன் மிகக் குறைந்த வர்த்தகத்தையே செய்துள்ளோம். ஆனால் அவர்களின் வரிகள் மிக அதிகம், உலகிலேயே மிக உயர்ந்தவை. இந்தியாவின் வர்த்தகக் கொள்கைகள் மிகவும் கடுமையானது மற்றும் அருவருப்பானது.
எல்லாம் நல்லதல்ல! எனவே, ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்தியா 25 சதவீத வரியையும், கூடுதலாக அபராதத்தையும் செலுத்தும்.
உக்ரைனில் நடைபெறும் கொலைகளை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று அனைவரும் விரும்பும் நேரத்தில், இந்தியா எப்போதும் ரஷ்யாவிடமிருந்து கணிசமான அளவு ராணுவ தளவாடங்கள் மற்றும் எரிசக்தி பொருட்களை வாங்கியுள்ளது' என்று குறிப்பிட்டார்.
ஒருபக்கம் இந்தியாவுக்கு வரிக்கு மேல் வரி விதித்து வரும் டிரம்ப், இன்னொரு பக்கம் பாகிஸ்தானுக்கு வரிச்சலுகை அறிவித்து இருப்பதுடன், பாகிஸ்தான் நாட்டுடன் கச்சா எண்ணெய் சப்ளை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளார்.
இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா கொடுத்த பதிலடி நடவடிக்கையால் இருநாடுகள் இடையே 4 நாட்களாக நடந்த போரை நான் தான் நிறுத்தினேன் என்று கிட்டத்தட்ட 30 தடவை டிரம்ப் கூறிவிட்டார்.
இன்னும் ஒருபடி மேலே சென்று பாக்.ராணுவ தளபதி அசிம் முனீருக்கு நடைமுறைகளை மீறி வெள்ளை மாளிகைக்கு அழைத்து விருந்து கொடுத்து உற்சாகப்படுத்தி உள்ளார்.
தற்போது பாகிஸ்தானுக்கு சலுகை மேல் சலுகையாக வரிச்சலுகை அறிவித்து இருப்பதும், பாகிஸ்தானில் எண்ணெய் கிணறு அமைக்கவும் அமெரிக்க முடிவு செய்துள்ளது இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், பாகிஸ்தானின் கடல் பகுதியில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவின் குறிப்பிடத்தக்க இருப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளில், பாகிஸ்தான் கடல் பகுதியில் கண்டறியப்பட்ட எண்ணெய் வளம், உலகளவில் நான்காவது பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில், டிரம்ப்பின் அறிவிப்பு பாக். எண்ணெய் வளத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ஒன்று என்பது தெளிவாகி உள்ளது.
டிரம்ப்பின் அறிவிப்பு வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் என்று கூறி பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்துள்ளார்.இது இரு தரப்பினருக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்டுள்ள பதிவில்
,' அமெரிக்காவில் நமது இரு தரப்பினரும் வெற்றிகரமாக முடித்த வரலாற்று சிறப்புமிக்க அமெரிக்க -பாகிஸ்தான் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தலைமைப் பங்காற்றியதற்காக அதிபர் டிரம்புக்கு எனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மைல்கல் ஒப்பந்தம் நமது வளர்ந்து வரும் ஒத்துழைப்பை மேம்படுத்தும். இதனால் வரும் நாட்களில் நமது நீடித்த கூட்டாண்மையின் எல்லைகளை விரிவுபடுத்தும்' என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் நடந்த இந்த ஒப்பந்தத்தில் பாகிஸ்தானின் நிதியமைச்சர் முகமது அவுரங்கசீப், அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி தூதர் ஜேமிசன் கிரீர் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பது, சந்தை அணுகலை விரிவுபடுத்துவது, முதலீட்டை ஈர்ப்பது மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் ஒத்துழைப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிற்கான பாகிஸ்தான் ஏற்றுமதிக்கான பரஸ்பர வரிகளைக் குறைக்கும். எரிசக்தி, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள், ஐடி, கிரிப்டோகரன்சி மற்றும் பிற துறைகளில் பொருளாதார ஒத்துழைப்பின் புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர். இந்தியாவுக்கு பதில் பாகிஸ்தானுடன் அமெரிக்கா நெருங்குவது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவுக்கு பாக். எண்ணெய் சப்ளை செய்யலாம். அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கத்தில்,'நாங்கள் இப்போதுதான் பாகிஸ்தானுடன் ஓர் ஒப்பந்தத்தை எட்டியுள்ளோம். அதன்படி, பாகிஸ்தானும், அமெரிக்காவும் இணைந்து மிகப்பெரிய எண்ணெய் கிடங்கு உருவாக்கவுள்ளோம். இது தெற்காசியாவின் மிகப்பெரிய எண்ணெய் கிடங்காக அமையும். இதை முன்னெடுத்துச் செல்லத் தகுதியான எண்ணெய் நிறுவனத்தை தேர்வு செய்து வருகிறோம். யாருக்குத் தெரியும், ஒருநாள் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எண்ணெய் விற்கலாம்' என்று தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கத்தில்,'நாங்கள் இப்போதுதான் பாகிஸ்தானுடன் ஓர் ஒப்பந்தத்தை எட்டியுள்ளோம். அதன்படி, பாகிஸ்தானும், அமெரிக்காவும் இணைந்து மிகப்பெரிய எண்ணெய் கிடங்கு உருவாக்கவுள்ளோம். இது தெற்காசியாவின் மிகப்பெரிய எண்ணெய் கிடங்காக அமையும். இதை முன்னெடுத்துச் செல்லத் தகுதியான எண்ணெய் நிறுவனத்தை தேர்வு செய்து வருகிறோம். யாருக்குத் தெரியும், ஒருநாள் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எண்ணெய் விற்கலாம்' என்று தெரிவித்தார்.