அன்புமணி தலைமையிலான பாமக அலுவலகம், தேர்தல் ஆணையம் கொடுத்த அங்கீகாரம்?
பா.ம.க. இராமதாஸ் Vs அன்புமணி

டெல்லி: இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பதிவு செய்த கட்சிகளின் பட்டியலில் அன்புமணி தலைமையில் இயங்கும் பாமக அலுவலகம் அக்கட்சியின் முகவரியாக இடம்பெற்றுள்ளது.
இதனால் அன்புமணி தலைமையில் இயங்கும் பாமகவுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஏனென்றால் கடந்த வாரம் பாமக தலைமை அலுவலகம் சென்னையில் இருந்து தைலாபுரத்திற்கு மாற்றப்பட்டதாக ராமதாஸ் கூறி இருந்தார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கியதோடு, தாமே பாமக தலைவர் என்று ராமதாஸ் அறிவித்தார். இதன்பின் ராமதாஸ் தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் அன்புமணி மீது முன் வைக்கப்பட்டது. அதேபோல் செளமியா அன்புமணியின் தலையீடு பாமகவில் இருப்பதாகவும் விமர்சித்திருந்தார்.
தொடர்ந்து அன்புமணி ஆதரவாளர்களைப் பதவி நீக்கம் செய்த ராமதாஸ், தனது ஆதரவாளர்களுக்குப் பொறுப்பை வழங்கினார். அதுமட்டுமல்லாமல் செயற்குழு கூட்டத்தையும் கூட்டினார். அந்த கூட்டத்தில் ராமதாஸ் தனது மூத்த மகள் காந்திமதிக்கும் அரங்கத்தில் அமர இடம் அளித்தார். இதனிடையே கடந்த வாரம் பாமக தலைமை அலுவலகம் சென்னையில் இருந்து தைலாபுரத்தில் மாற்றப்பட்டதாக ராமதாஸ் அறிவித்தார்.
அதேபோல் பாமக தலைவரின் பதவிக்காலம் மே 29ஆம் தேதி முடிவடைந்ததால், புதிய பொறுப்பாளர்களின் பெயருடனான கடிதம் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுவிட்டதாக ராமதாஸ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தேர்தல் ஆணையம் தரப்பில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் பாமக தலைமை அலுவலகத்தின் முகவரியாக அன்புமணி தலைமையில் இயங்கும் அலுவலகத்தில் முகவரி இடம்பெற்றிருக்கிறது. அன்புமணி தலைமையில் இயங்கும் பாமக தலைமை அலுவலகம் சென்னையில் தி நகரில் உள்ள திலக் தெருவில் இயங்கி வருகிறது. இதனால் அன்புமணி தலைமையிலான பாமகவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருப்பதாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம் பாமக தலைவர் அன்புமணி டெல்லி சென்று பாஜக தலைவர்களையும், தேர்தல் ஆணையத்திற்கும் சென்று சில சந்திப்புகளை நடத்தி இருந்தார். அதேபோல் அன்புமணி தொடர்ச்சியாக திமுகவை கடுமையாக விமர்சித்து வருவதோடு, பாஜக மற்றும் அதிமுக குறித்து விமர்சிப்பதில்லை. இதன் காரணமாக அதிமுக - பாஜக கூட்டணி அன்புமணி இணைவார் என்று கூறப்படுகிறது.
இதனால் பாஜக ஆதரவு நிலைப்பாடு காரணத்தால் தேர்தல் ஆணையம் அன்புமணி தலைமையிலான பாமகவை அங்கீகரித்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ராமதாஸ் தலைமையில் உள்ள பாமக ஆகஸ்ட் மாதத்தில் மகளிர் அணி மாநாட்டை நடத்த ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த சம்பவம் ராமதாஸ் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.