நெய்வேலியில் ரூ 400 கோடி மதிப்பிலான இருடியத்தை விற்க முயன்ற 7 பேரை மாறு வேடத்தில் மடக்கிப் பிடித்த போலீசார். !
நெய்வேலி

கடலூர் மாவட்டம் நெய்வேலியில், சுமார் ரூ.400 கோடி மதிப்பிலான இரிடியத்தை விற்க முயன்ற 7 பேர் கொண்ட கும்பலை, மாறுவேடத்தில் இருந்த மாவட்ட குற்ற நுண்ணறிவுப் பிரிவு போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருள் இரிடியம்தானா அல்லது போலியானதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெய்வேலியைச் சேர்ந்த 50 வயதான முருகன், சேலத்தைச் சேர்ந்த கேசவன் என்பவரைச் சந்தித்துள்ளார். தன்னிடம் ரூ.400 கோடி மதிப்புள்ள இரிடியம் இருப்பதாகவும், அதை விற்று கிடைக்கும் பணத்தில் சரிபாதியாகப் பிரித்துக் கொள்ளலாம் என்றும் கேசவன் முருகனிடம் கூறியுள்ளார். இதை நம்பிய முருகன், ரூ.25 லட்சத்தை முன்பணமாகக் கொடுத்து கேசவனிடம் இருந்து "இரிடியத்தை" வாங்கியுள்ளார்.
இந்நிலையில், ஒரு வாரத்திற்கு முன்பு கேசவன் திடீரென உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், வாங்கிய இரிடியத்தை விற்றால் ரூ.400 கோடியும் தனக்கே கிடைக்கும் என பேராசை கொண்ட முருகன், அதை நெய்வேலி பகுதியில் விற்க முயன்றுள்ளார். இந்த தகவல் எப்படியோ மாவட்ட குற்ற நுண்ணறிவுப் போலீசாருக்கு எட்டியது.
முருகனை கையும் களவுமாகப் பிடிக்க இன்ஸ்பெக்டர் ஜெரால்டு தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், இரிடியம் வாங்கும் வியாபாரி போன்று முருகனின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். போலீசார் என்பதை அறியாத முருகன், தனிப்படை போலீசாரை நெய்வேலி ஆர்ச் கேட் பகுதிக்கு வரவழைத்துள்ளார்.
மாறுவேடத்தில் வந்த மூன்று தனிப்படை போலீசார், வெளிமாவட்ட பதிவு எண்கள் கொண்ட இரண்டு கார்களில் நெய்வேலி ஆர்ச் கேட் பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கிருந்து முருகனின் ஆட்கள் காரில் பின்தொடர்ந்தபடியே இவர்களை அழைத்துச் சென்றுள்ளனர்.
குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும், முருகனின் ஆட்கள் தாங்கள் வந்த காரில் இருந்து இறங்கி, அங்கு தயாராக நின்ற மற்றொரு காரில் ஏறி புறப்பட்டுள்ளனர். இப்படி மூன்று இடங்களில் காரை மாற்றி, மாற்றி ஏறி நெய்வேலி டவுன்ஷிப் முழுவதும் சுற்றி வந்தனர். இறுதியாக, நெய்வேலி திடீர்குப்பம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு தனிப்படை போலீசாரை அழைத்து வந்தனர்.
அங்கு தயாராக இருந்த முருகன், ஐந்து அடுக்கு கண்ணாடிப் பெட்டியில் இரிடியம் வைத்திருப்பதாகவும், அதைப் பார்க்க ரூ.6 லட்சம் முன்பணம் தர வேண்டும் என்றும், ஸ்கேன் செய்யும் கருவியை கொண்டு வந்துள்ளார்களா என்றும் போலீசாரிடம் கேட்டுள்ளார். அதற்கு தனிப்படை போலீசார், பணமும், ஸ்கேன் செய்யும் கருவியும் காரில் இருப்பதாகவும், முதலில் பொருளைக் காட்டினால், பிறகு இரண்டையும் கொண்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.
இதை நம்பிய முருகன், கண்ணாடிப் பெட்டியில் இருந்த மர்மப் பொருளைக் காட்டியுள்ளார். இதை உறுதி செய்துகொண்ட மாறுவேட தனிப்படை போலீசாரும், வெளியே மறைந்து நின்ற மற்ற போலீசாரும் சேர்ந்து முருகனையும், அவருடன் இருந்த நெய்வேலி 30-வது வட்டத்தைச் சேர்ந்த ஆனந்த் (35), விக்னேஸ்வரன் (33), மணிகண்டன் உட்பட 7 பேரையும் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
இரிடியம் எனக் கூறப்பட்ட மர்மப் பொருளையும் பறிமுதல் செய்த போலீசார், கைது செய்யப்பட்டவர்களை நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தனர். விசாரணையில், கைதானவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கண்ணாடிப் பெட்டிக்குள் இருப்பது உண்மையிலேயே இரிடியம்தானா அல்லது இரிடியம் போன்ற போலியான பொருளைக் காண்பித்து பண மோசடியில் ஈடுபட முயன்றனரா, வேறு யாரிடமாவது மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா என்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் நெய்வேலியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.