கேரளாவில் 6 மாநகராட்சிகளில் 4 காங்கிரஸ் முன்னிலை, கம்யூனிஸ்ட் 1, பா.ஜ.க. 1 முன்னிலை. !

கேரளா உள்ளாட்சி தேர்தல்

கேரளாவில் 6 மாநகராட்சிகளில் 4 காங்கிரஸ் முன்னிலை, கம்யூனிஸ்ட் 1, பா.ஜ.க. 1 முன்னிலை. !

திருவனந்தபுரம்: கேரளா உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி 4 மாநகராட்சிகளில் முன்னிலையில் உள்ளது.

இதுதவிர ஆளும் இடதுசாரிகளின் கூட்டணி ஒரு மாநகராட்சியிலும், பாஜக திருவனந்தபுரம் மாநகராட்சியிலும் முன்னிலையில் உள்ளது.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பினராயி விஜயன் செயல்பட்டு வருகிறார். இங்கு காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ளது. பாஜக கேரளாவில் காலுன்ற துடித்து வருகிறது.

கேரளாவில் கிராம பஞ்சாயத்து, பிளாக் பஞ்சாயத்து, மாவட்ட பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி என்று அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கடந்த 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இன்று ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன.

கேரளாவில் திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொல்லம், எர்ணாகுளம், திரிச்சூர், கண்ணூர் என்று மொத்தம் 6 மாநகராட்சிகள் உள்ளன. இதில் 4 மாநகராட்சிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. அதன்படி கொல்லம், எர்ணாகுளம், திரிச்சூர், கண்ணூர் மாநகராட்சியில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். மாறாககோழிக்கோடு மாநகராட்சியில் ஆளும் இடதுசாரிகளின் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக முன்னிலை வகிக்கிறது.

எர்ணாகுளம் மாநகராட்சி

காலை 11 மணி நிலவரப்படி எர்ணாகுளம் மாநகராட்சியில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்றது. இங்கு 76 வார்டுகள் உள்ளன. 39 வார்டுகளில் வென்றால் மாநகராட்சியை கைப்பற்றலாம். தற்போது காங்கிரஸ் கூட்டணி 44 வார்டுகளில் முன்னிலையில் உள்ளது. இடதுசாரிகளின் கூட்டணி 254 வார்டுகளிலும், பாஜக கூட்டணி 4 வார்டுகளிலும், மற்றவர்கள் 5 வார்டுகளிலும் முன்னிலையில் உள்ளனர்.

திரிச்சூர் மாநகராட்சி

திரிச்சூர் மாநகராட்சியில் 56 வார்டுகள் உள்ளன. இந்த மாநகராட்சியை கைப்பற்ற வேண்டும் என்றால் 29 வார்டுகளில் வெற்றி பெற வேண்டும். இங்கு காங்கிரஸ் கூட்டணி 34 வார்டுகளில் முன்னிலையில் உள்ளது. இடதுசாரிகளின் கூட்டணி 11 வார்டுகளிலும், பாஜகவின் என்டிஏ கூட்டணி 8 வார்டுகளிலும், மற்றவர்கள் 4 வார்டுகளிலும் முன்னிலையில் உள்ளனர்.

கண்ணூர் மாநகராட்சி

அதேபோல் 56 வார்டுகள் கொண்ட கண்ணூர் மாநகராட்சியை கைபற்ற 29 வார்டுகளில் வெல்ல வேண்டும். தற்போது காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் 32 வார்டுகளிலும், இடதுசாரிகளின் கூட்டணி வேட்பாளர்கள் 11 இடங்களிலும், பாஜக கூட்டணி வேட்பாளர்கள் 4 வார்டுகளிலும், மற்றவர்கள் ஒரு வார்டிலும் முன்னிலையில் உள்ளனர்.

கொல்லம் மாநகராட்சி

மொத்தம் 56 வார்டுகள் உள்ள கொல்லம் மாநகராட்சியை கைப்பற்ற ஒரு கட்சி 29 வார்டுகளில் வெற்றி பெற வேண்டும். இங்கு காங்கிரஸ் கூட்டணி 13 வார்டுகளிலும், இடதுசாரிகளின் கூட்டணி 8 வார்டுகளிலும், பாஜக கூட்டணி 8 வார்டுகளிலும் முன்னிலையில் உள்ளது.

கோழிக்கோடுவில் இடதுசாரிகள்

கோழிக்கோடு மாநகராட்சியில் மொத்தம் 76 வார்டுகள் உள்ளன. 29 வார்டுகளில் வென்றால் மாநகராட்சியை கைப்பற்றலாம். இங்கு இடதுசாரிகளின் கூட்டணி 26 வார்டுகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 20 வார்டுகளிலும், பாஜகவின் என்டிஏ கூட்டணி 9 வார்டுகளிலும், மற்றவர்கள் 3 வார்டுகளிலும் முன்னிலையில் உள்ளனர்.

திருவனந்தபுரத்தில் பாஜக

101 வார்டுகள் உள்ள திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்ற 51 வார்டுகளில் வெல்ல வேண்டும். தற்போது பாஜக கூட்டணி 30 வார்டுகளிம், காங்கிரஸ் கூட்டணி 14 வார்டுகளிலும், இடதுசாரிகளின் கூட்டணி 20 வார்டுகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.