நாங்கள் ஆட்சியமைத்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை. ! ஆட்சி அமைத்த 20 நாட்களில் வேலை உறுதி செய்யப்படும் என தேஜஸ்வி யாதவ். !
பீகார் தேர்தல்
பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பில் உள்ளது. அரசியல் கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ், நாங்கள் ஆட்சிக்கு வந்த 20 நாட்களில் பீகாரில் உள்ள அனைத்து குடும்பத்திலும் தலா ஒருவருக்கு அரசு பணி வழங்க சட்டம் இயற்றப்படும் என்று அறிவித்திருப்பது அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
பீகார் மாநிலத்தில் வருகிற நவம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல், 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் என்பதால் மொத்த நாடும் தேர்தலை உற்று நோக்கி வருகிறார்கள்.
பீகார் தேர்தல் களம்
பீகார் அரசியல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் - பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி, தேஜஸ்வியின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸின் இந்தியா கூட்டணி, பிரசாந்த் கிசோரின் ஜன்சுராஜ் கட்சி 3 முனை போட்டி நிலவுகிறது. இந்தியா கூட்டணி சார்பில் தேஜஸ்வி யாதவ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தேசிய தலைவர்கள் தொடங்கி மாநில தலைவர்கள் வரை பீகாரில் முகாமிட்டுள்ளனர். இந்தியா கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி மாறி மாறி வாக்குறுதிகளை வழங்கி வருகிறார்கள். பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் தேஜஸ்வி யாதவ் மற்றும் அமித்ஷா ஒரே நாளில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.
அனல் பறக்கும் பிரச்சாரம்
அங்கு பொதுக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வர் நிதீஷ்குமாரும் பீகார் மாநில வளர்ச்சியை முதன்மையாக வைத்து பணியாற்றுகிறார்கள். லல்லு பிரசாத்திற்கு தன் குடும்பத்தின் வளர்ச்சியை தான் முதன்மை நோக்கமாக வைத்துள்ளார். இங்கு மீண்டும் மன்னராட்சி முறை வருவதை மக்கள் ஏற்க மாட்டார்கள்." என்று கூறினார்.
மற்றொரு பொதுக் கூட்டத்தில் பேசிய தேஜஸ்வி யாதவ், "மத்திய பாஜக அரசும், மோடியும் குஜராத்திற்கு ஒதுக்கியதில் 1 சதவீதம் கூட பீகாருக்கு ஒதுக்கவில்லை. பீகாரை திட்டமிட்டு புறக்கணிக்கிறார்கள். எங்கள் ஆட்சி பதவியேற்ற பிறகு பீகாரை நாட்டின் நம்பர் 1 மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு நம் மாநிலத்தை நோக்கி நிறைய முதலீடுகளை ஈர்க்க வேண்டும்.
20 நாட்களில் அரசு வேலை
கல்வி, மருத்துவம் ஆகியவற்றின் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். முக்கியமாக வேலை வாய்ப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். எங்களின் இந்தியா கூட்டணி வேலை வாய்ப்புக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றுகிறது. மேலும் மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்துவதை முக்கிய இலக்காக கொண்டுள்ளோம்.
வெளிப்படையான, பொறுப்புள்ள அரசாங்கமாக செயல்பட்டு மக்களிடம் நம்பத்தன்மையை காப்பாற்றுவோம். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த 20 நாட்களின் பீகாரில் உள்ள அனைத்து குடும்பங்களிலும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க சட்டம் இயற்றுவோம். இதன் மூலம் அனைத்து குடும்பத்தினருக்கும் அரசு வேலை உறுதி செய்யப்படும். ஆட்சிக்கு வந்த 20 மாதங்களில் பணியிடங்களை நிரப்பி நடவடிக்கை எடுப்போம்.
ஏதோ ஆட்சியை பிடித்து அரசாங்கம் அமைக்க வேண்டும் என்ற ஒற்றை காரணத்திற்காக நான் தேர்தலில் போட்டியிடவில்லை. பீகாரை சக்தி வாய்ந்த மாநிலமாக மாற்றி, இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன் மாதிரியான மாநிலமாக கொண்டு வருவதற்காக தான் தேர்தலில் போட்டியிடுகிறோம்." என்றார்.
