தமிழ்நாடு அரசு அதிகாரத்தை பயன்படுத்தி நீண்ட கால சிறையில் உள்ள இசுலாமிய கைதிகள் மற்றும் நீண்ட சிறைவாச கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன்.!
த வா க
தமிழ்நாடு அரசு அதிகாரத்தை பயன்படுத்தி நீண்ட கால சிறையில் உள்ள இசுலாமிய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அறிக்கை விடுத்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு, கடந்த நவம்பர் 19ஆம் தேதி மிக முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
அத்தீர்ப்பில், தண்டனை கைதிகளுக்கு இடைக்கால விடுப்பு, பிணை வழங்குவது, கைதிகளின் தண்டனை காலத்தை குறைத்து விடுதலை செய்வது உள்ளிட்ட விவகாரங்களில் நீதிமன்றத்துக்கும், மாநில அரசுக்கும் உள்ள அதிகாரங்கள் குறித்து விரிவாக விளக்கம் அளித்துள்ளது.
சர்ஃபுதீன், முகமது ரஃபீக் , அபுதாஹிர், ஹக்கீம், முகமது புஹாரி, நவாப் கான், முகமது ஹசன், அப்துல் ரஸாக், சாந்து முகமது , முகமது மூசா, முகமது அசாம், முகமது அலி, முகமது அன்சாரி உள்ளிட்டோர் தண்டனை கைதிகளாக உள்ள நிலையில், இடைக்கால விடுப்பை நீட்டிக்க வேண்டும் என கோரியிருந்தனர்.
இந்த அனைத்து வழக்குகளையும் இணைத்து பொதுவான தீர்ப்பை நீதிபதி சதீஷ்குமார் அளித்துள்ளார்.
குறிப்பாக, தமிழ்நாடு சிறை விதிகள் மற்றும் அரசின் அரசாணைகள் அடிப்படையில் முன்விடுதலை கோரி கைதிகள் அளித்த மனுக்கள் அரசின் பரிசீலனையில் இருக்கும்போதோ அல்லது மனு நிராகரிக்கப்பட்டாலோ, தங்கள் மனுவை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி கைதிகள் நீதிமன்றத்தை அணுகும் நடைமுறை இதுவரை இருந்து வந்துள்ளதை நீதிபதி சதீஷ்குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தண்டனை விதிப்புக்கு பின்னர் நீதிமன்ற காவலிலிருந்து அரசின் சிறைத்துறை கட்டுப்பாட்டுக்கு கைதி சென்று விடுகிறார். எனவே, குறிப்பிட்ட கைதிக்கு இடைக்கால விடுப்பு,பிணை மற்றும் முன்விடுதலை வழங்குவது உள்ளிட்ட நடைமுறை மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டவை.
குறிப்பாக 10.01.25 தேதியிட்டு தமிழ்நாடு சிறை விதிகள் 2024ன் கீழ் சிறை கைதிகள் முன்விடுதலை செய்வது குறித்த நிலையான இயக்க நடைமுறையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. எனவே தண்டனை நிறுத்திவைக்கும் விதிகளின் கீழ் அரசே முடிவு செய்யலாம் என்று நீதிபதி சதீஷ்குமார் கூறியுள்ளார்.
தொடர்ந்து, மாநில அரசானது தமக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தகுதியான நபர்களுக்கு இடைக்கால விடுப்பு, தண்டனை நிறுத்திவைப்பு மற்றும் முன்விடுதலை ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கைதியின் முன்விடுதலை கோரிக்கையை அரசு நிராகரித்தால் மட்டுமே குறிப்பிட்ட நபரின் வழக்கில் நீதிமன்றத்தால் தலையிட முடியும் என்று நீதிபதி சதீஷ்குமார் அழுத்தமாக கூறியிருக்கிறார்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களின் மனுக்களை மூன்று மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டிருக்கிறார்.
எனவே, பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோர் பிறந்தநாளை முன்னிட்டு தண்டனை கைதிகளை விடுவிக்கும் நடைமுறை உள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு, பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நீண்டகாலம் சிறைவாசம் அனுபவிக்கும் 700 ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனை காலத்தை குறைத்து முன்விடுதலை செய்திட அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார்.
இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்திருந்தது. ஆனால், அக்குழு பரிந்துரை அடிப்படையில் தண்டனை கைதிகளை விடுவித்து தமிழ்நாடு அரசு அனுப்பும் கோப்புகளில் கையெழுத்திட மறுத்து ஆளுநர் ரவி தொடர்ச்சியாக முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.
எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படி, தமிழ்நாடு அரசுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, இசுலாமியர்கள் உள்ளிட்ட நீண்ட காலம் சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க, தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.
